திங்கள், நவம்பர் 08, 2010

வீரமாமுனிவர் எனும் தமிழ்த் தொண்டர்!

தமிழ்த் தொண்டர் வீரமாமுனிவரின் 331வது பிறந்தநாள் இன்று...

கிறித்துவ கொள்கைகளை இந்திய மக்களுக்கு குறிப்பாக தமிழருக்கு எடுத்தியம்ப வந்த யேசுசபை அருட்தந்தை 'கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி' எனும் வீரமாமுனிவரின் பிறந்தநாளில் அவரை நினைவுகூறுவதில் மகிழ்ச்சி...

இத்தாலியில் 1680 நவம்பர் மாதம் 8ஆம் தேதி பிறந்த வீரமாமுனிவர் 1710 ஆம் ஆண்டு தமிழகம் வந்து 36 ஆண்டுகள் இறைபணி மற்றும் தமிழ் தொண்டாற்றி தமிழகத்திலேயே 1746 பெப்ருவரி 4 ஆம் நாள் இறைவனடி சேர்ந்தார்கள்.

தமிழ் இலக்கியத்தில் 'அகரமுதலி' எனும் 'அகராதி' ('அ'கர வரிசையிலுள்ள தமிழ் வார்தைக்களுக்கு தமிழில் விளக்கம் இருக்கும்) வகை இலக்கியபிரிவில் வடமொழி மற்றும் செய்யுள் வடிவம் ஆக்கிரமித்து இருக்கையில் 'சதுரகராதி' என்ற படைப்பை தமிழுக்கு தந்தார். இதற்கு பின்னால் பல அகாராதிகள் இதனை போன்று வந்த போதும் இந்த வரிசையில் சிறந்த முதன்மையான படைப்பு இதுவாகும்.  இதனால் அவர் 'தமிழகராதிகளின் தந்தை' எனவும் அழைக்கபடுகிறார்.

தமிழுக்கு உரைநடையில் இலக்கிய படைப்புகளை அறிமுகப்படுத்தியவரும் இவர்தான், அதற்கு 'கொடுந்தமிழ் இலக்கணம்' இலக்கணமும் வகுத்துள்ளார். மேலும் தொன்னூல் விளக்கம் என்ற இலக்கண நூலையும் இயற்றிவுள்ளார்.

செய்யுள், இலக்கணம், அகராதி, உரைநடை, மொழிபெயர்ப்பு, காவியம் என பல தமிழ்த்துறையிலும் சிறப்பான படைப்புகளை தந்த வீரமாமுனிவர் மொத்தம் 23 நூல்கள் தமிழில் எழுதியுள்ளார். அனைத்தும் முத்துக்கள். குறிப்பாக இயேசுவை பற்றி எழுதிய 'தேம்பாவணி' என்ற காவியம் தமிழில் அரிதான படைப்பாகும். சிற்றிலக்கியங்கள்  திருக்காவலூர்க் கலம்பகம், அடைக்கல மாலை, அன்னை அழுங்கல் அந்தாதி், கித்தேரியம்மாள் அம்மானை ஆகியவற்றையும் , உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குரு கதை, வாமன் கதை ஆகியவற்றையும் தந்துள்ளார். திருக்குறளை (அறத்துப்பால், பொருட்பால்) இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.

தமிழ் உட்பட 9 மொழிகள் தெரிந்த வீரமாமுனிவர், நீண்ட நாள் மதுரையிலும் மதுரையை சுற்றியுள்ள கிராமங்களிலும் மக்களை சந்தித்து, எளிய வாழ்க்கை வாழ்ந்து தம் வாழ்க்கையினாலும் தமிழறிவாலும் கிறித்துவின் போதனைகளை போதித்து வந்தார். வீரமாமுனிவர் அவ்வப்போது மதுரையில் தமிழ்ச் சங்கத்தில் கலந்து கொண்டு தமிழ்த் தொண்டாற்றி வந்தார். அவருடைய தமிழ்த்தொண்டு அளப்பெரியது. அன்னாரின் தமிழ் மொழிப்பற்று தமிழருக்கும் தமிழுக்கும் பெருமை அளிப்பதாகும். 

வெள்ளி, அக்டோபர் 29, 2010

அன்பு அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


அன்பு அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


என் தந்தையின் பிறந்தநாளன்று தேசத்திற்கே விடுமுறை... ஆம்... தேசப்பிதா பிறந்தநாளில் பிறந்தவாங்க தன் எங்கள் பிதா[அப்பா]... என் தந்தையும் என்னுடைய பாசமிகு எட்டாவது வகுப்பு ஆங்கில ஆசிரியருமான, இப்பொழுது நாங்குநேரி தாலுஹா பரப்பாடி-இலங்குளம் ஆர்.சி. பள்ளி தலைமையாசிரியராக பணி புரிந்து வரும் திரு. எம். ஆசீர்வாதம் B.Lit., M.A., M.Ed. சார்க்கு, அக்டோபர் 2 ஆம் நாளோடு 58 அகவை நிறைவடைந்தது... இந்த மாத இறுதியோடு [அக்டோபர் 31] அவர்களுக்கு ஓய்வு! ஆசிரியர் பணியிலிருந்துதான் சமுதாயப்பணியிலிருந்தல்ல... என் வாழ்கையை அவர்களோடு சேர்ந்து இசைக்கையில் அவரிடம் நான் படித்த பாடங்கள் மற்றும் அவர்களுடைய அனுபவங்கள் ஒரு பதிவாய் இங்கே!

பிறப்பு:
  • பிறந்தது 1952 ல் நெல்லைச் சீமை வண்டலம்பாடு கிராமத்தில். அதாவது வண்டல்மண் நிரம்பிய பாடாம்(பாடு என்றால் நீர்நிலை அருகில் இருக்கும் சமவெளி போன்ற இடம்).
  • மரியான் அன்னம்மாள் தம்பதியரின் 11 வது குழந்தை (தாதாவுக்கு மொத்தம் 12 குழந்தைகள், 10 புதல்வர்கள், 2 புதல்விகள்).
  • சிறிது வசதி என்றாலும் இவ்வளவு குழந்தைகளை வளர்க்க ரொம்ப கஸ்டபட்டிரிக்கிறார் தாத்தா. விவசாயம், பனை ஏறுதல், மீன் விற்றல் அவர் தொழில்கள்... வரட்சியான நேரமது, மாறி மாறி தொழில் செய்வார்...
  • கஸ்டத்திலும் தாத்தா கூறுவாராம், "நான் இலட்சாதிபதி, எனக்கு சொத்து என் 12 இலட்சங்கள்(குழந்தைகள்)".

வளர்ந்தது:
  • கிராமத்தில் பள்ளி கிடையாது... 1 கி.மீ. தூரத்தில் பக்கத்துக்கு கிராமமான மூலைக்காட்டில் தான் எட்டாவது வரை பள்ளி இருக்கிறது... படிப்பதில் அப்பா சிறுவயதிலிருந்தே அதிக விருப்பம். இரண்டாவது அண்ணன் ஊரின் முதல் வாத்தியார், அவரால் கிடைத்த ஊக்கம்...
  • உடன்பிறப்புகள் பலரும் அதிக விருப்பம் இல்லாத காரணத்தினாலும் வறுமையினாலும் வெளியூர்க்கு வேலைக்கு செல்கின்றனர்.
  • எல்லோரும் வெளியூர்க்கு வேலைக்கும் சென்றாலும், கூடப்படித்த நண்பர்கள் கூலி அல்லது பிற தொழிலுக்கு ஊரிலேயே சென்றாலும், சிலர் சின்ன வயதிலேயே பள்ளிக்கு செல்லாமல் கெட்ட வெளியில் சென்றபோதும், அப்பா மட்டும் மனம் பிறழாமல் பள்ளி சென்று சிறப்பாக படித்தார்... தாத்தாவும் நல்ல ஆதாரவை அளித்தார்...
  • ஒன்பதாவது படிக்கும்போது ஒருநாள் குருசடியில் சென்று செபம் செய்ய அப்பா சென்றிருந்தபோது திடீரென சித்தப்பா ஓடிவந்து தங்கள் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என அழைத்து சென்றார். அப்பாவும், சித்தப்பாவும் வீடு வருவதற்குள் பாட்டி இறந்து விட்டார்கள். அப்பாவின் வேதனை சொல்லிலடங்கா...
  • அப்பா விடாமுயர்ச்சியால் நடுநிலை பள்ளி படிப்பை முடித்து, அப்புறம் 3 கி.மீ. தூரத்திலுள்ள கள்ளிகுளத்தில் உயர்நிலை பள்ளி படிப்பை தொடர்ந்து படித்து, அந்த காலத்திலேயே S.S.L.C (11 வது வகுப்பு)ல் 400 க்கு மேல் மதிப்பெண் வாங்கினார்கள். எனவே ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இடம் வீடு தேடி வந்தது. அப்பொழுது கல்லூரியில் சேர்வதே அபூர்வம், அதுவும் ஆசிரியர் பயிற்சியில் சேர்வது மிக மிக அபூர்வம், கடினம்.

ஆசிரியர் பயிற்சி:
  • கோவில்பட்டி அருகே 'போளி'க்கு பேர்போன கடம்பூரை ஒட்டினார்போலுள்ள பரிவல்லிக்கோட்டை என்ற ஊரில் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்தார்கள்.
  • சேரும்போது ஒரு வேடிக்கையான நிகழ்வு... அப்போதெல்லாம் கண்டிப்பாக ஆசிரியர் பயிற்சி பள்ளியில் வேட்டி கட்ட வேண்டுமாம். சேர்ந்ததுமே பாதி வாத்தியார் என்றுதான் சொல்வார்களாம்... அப்பா S.S.L.C வரை அரைக்கால் சட்டை தான் உடுத்தியிருக்கிரார்கள்... பெரியப்பா (அப்பாவின் வாத்தியார் அண்ணாச்சி) தான் வேட்டி வாங்கி அணிவித்து சேர்த்துவிட்டு வந்தார்களாம்.
  • அப்போது 'ஆதாரக்கல்வி' எனும் காந்திய கல்வி முறையாம்... அதாவது, படிப்புடன் தங்கள் தேவையை தாங்களே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்... விவசாயம், நூல் நூற்பது, சமையல், வாகன ஓட்டுனர் மற்றும் சரிபார்க்கும் பணி, புத்தக நிலையத்தை கவனித்து கொள்ளுதல், அது மட்டுமின்றி அவர்களே பாடமும் எடுப்பார்கள்... இவர்களை கண்காணிக்கவும் ஊக்குவிக்கவும் மட்டுமே ஆசிரியர்கள்...
  • இதுமட்டுமின்றி இந்த கல்வி முறையின்படி சிறப்பு ஊக்க ஊதியமும் உண்டு... மாதம் சுமார் 10 ரூபாய் கிடைக்குமாம்... எல்லாத்தேவையும் போக 5 ரூபாய் சேத்து வைத்து தாதாவுக்கு அனுப்பிவிடுவார்களாம்...
  • 1972 வது வருடம். S.S.L.C முடித்து 2 வருடத்தில் வாத்தியாராகிவிட்டார்கள்... வயது 19 தான்... ஆனால் வேலை கிடைப்பது அவ்வளவு எளிதல்ல... அதுவும் பள்ளியே இல்லாத கிராமத்தில் இருந்து ஒருவர்க்கு... அப்புறம் எப்படி ஆசிரியர் பணி...?

ஆசிரியர் பணி (தற்காலிகம்):
  • இந்த நாட்களில் அப்பா வாத்தியாராக கற்றுக்கொடுத்த பாடங்களை விட கற்ற பாடங்களே மிக அதிகம்...
  • தற்காலிக பணியாக சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளியிலும் பயிற்றுவித்துள்ளார். மூலைக்காடு, கள்ளிகுளம், ஆருபுளி, கிழவநேரி, சௌந்திரபாண்டியபுரம், காவல்கிணறு, முத்துநாடார் குடியிருப்பு, துறை குடியிருப்பு, இன்னும் பல ஊர்கள். பல பள்ளிகள்.
  • இந்நாட்களில் அவர் பகலில் அல்லது சாயங்காலத்தில் தாத்தாவை பார்த்துவிட்டு உயர்நிலைப் பள்ளியில் பணி புரியும் பெரிய சைன்ஸ் சாருடன் கள்ளிகுளத்தில் ஒரு வாடகை வீட்டில் இரவு தங்குவார்.
  • தனக்கு கிடைத்த முதல் சில மாத வருமானத்தில் தானே கல்லூரி சென்று பி.யு.சி. படித்தார்.
  • மீண்டும் தற்காலிக பணி... இவ்வாறு பல மாதங்கள் சென்றன...

குருத்துவ படிப்பு:
  • திடீரென ஒருநாள் தனக்கு குருத்தவ (அருட்தந்தை) பணிக்கு இறைவன் அழைப்பதாக உணர்ந்து மதுரையில் குருத்துவ கல்லூரியில் இணைந்து இறையியல் படிக்க ஆரம்பித்தார்.
  • அங்கே படிப்பது அவ்வளவு எளிதல்ல... முழுவதும் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும். ஏற்கனவே பாடமாக படித்திருந்தாலும் முன்அனுபவம் இல்லாமல் கொஞ்சம் பேசுவது கஷ்டம் தானே. அப்பொழுதுதான் அப்பா ஆங்கிலத்தில் நல்ல புலமை அடைந்தார்கள்.
  • அவ்வப்போது விடுமுறைக்கு ஊர்க்கு வருவார். அப்போது ஒருமுறை வரும்போது, சொந்த ஊர் பக்கத்தில் ஒரு நிலத்தை அவரும் மூன்று சகோதர்களும் சேர்ந்து வாங்க நினைக்க, தன் மொத்த சேமிப்பையும் கொடுத்துதவி (சிலரிடம் பணம் இல்லாதபோதும்) வாங்கினார்கள். நான்தான் துறவியாக போகிறேனே எனக்கெதுக்கு நிலம் என அந்த மூன்று பேர்கட்கு எழுத சொல்லிவிட்டார்.
  • அந்நாளில், தாத்தாவிற்கு இத்தனை புதல்வர்கள் இருந்தும் கவனிக்க சரியான ஆளில்லாமல் கஷ்டப்பட்டிருக்கிறார். இது அப்பாவிற்கு ரொம்ப கவலை அளிக்கவே குருத்துவ படிப்பை ஒரு வருடத்திலேயே விட்டு விட்டு தன் தந்தைக்காக ஊர் திரும்பினார்.
  • மீண்டும் ஊர் சுற்றுவட்டாரங்களில் தற்காலிக ஆசிரியர் பணி... அப்பொழுது ஒரு பெரிய விபரீதம் நடந்தது. அப்பாவிற்கு மிகவும் ஊக்கமாய் இருந்த பள்ளிகூடத்து அண்ணாச்சி இறந்துவிட்டார்கள். தாத்தாவும் சிறுது நாளில் இறந்து விட்டார்கள். மிகவும் கவலை அடைந்தார்கள் அப்பா.

நிரந்தர ஆசிரியர் பணி:
  • ஒரு வழியாக, ஆசிரியர் பயிற்சி முடிந்து எட்டு வருடங்கள் கழித்து 1980 ல் ஆசிரியர் வேலை கிடைக்கிறது. பக்கத்து ஊர் மூலைக்காட்டில் இடைநிலை ஆசிரியராக முதல் வேலை.
  • பலநாள் தவம் நிறைவேறியது. ஏற்கனவே தற்காலிக பணியினால் கிடைத்த அனுபவத்தால் திறம்பட பணி ஆற்றினார்கள்.
  • அப்போதும் கஷ்டம தீர்ந்தபாடில்லை. ஏனென்றால் ஊக்கமாக இருந்த அண்ணனும் இல்லை, தந்தையும் இல்லை. சகோதரர்கள் பெரும்பாலோர் வெளியூர். உள்ளூர் அண்ணன்களும் அவர்கள் குடும்ப வேலையில் கவனமாய் இருந்தார்கள். இவர்தான் தன் தேவைகள் மற்றும் வேலைகள் எல்லாம் பார்க்க வேண்டும்.
  • இந்த நேரத்தில் அப்பா முழுவதுமாக கள்ளிகுளத்தில் தங்கி விட்டார்கள். ஒரு நிலம் வாங்கி வீடும் கட்ட ஆரம்பித்தார்கள்.

திருமண வாழ்க்கை மற்றும் குழந்தைகள்:
  • சில பெரியவர்கள் உதவியுடன் 1982 செப்டம்பர் 15 ல் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகிலுள்ள போத்தக்காலன்விளை திரு. எஸ்.எம்.எம். மாணிக்கம் (பழைய கி.மு. கிராம முனிசிபல் என்றால் எல்லோர்க்கும் தெரியும்) கிரேசம்மாள் டீச்சர் அவர்களின் மகள் ஜூலியட் என்ற என் அம்மாவிற்கும் திருமணம் முடிந்தது...
  • நான் [ஸ்நாபக் வினோத்] பிறக்கவும், வீடு கட்டி முடிக்கவும் சரியாக இருந்தது. அது முதல் நாங்கள் இதே வீட்டில்தான் உள்ளோம். இரண்டு வருடத்தில் தங்கை ஸ்நாபக் வித்யாவும் பிறந்தாள். [ஸ்நாபக் பெயர் காரணத்தை அப்புறமாக விளக்குகிறேன்]
  • அதன் பிறகுதான் அம்மாவிற்கு டீச்சர் வேலை கிடைத்தது. கொஞ்சம் கஷ்ட படுவோம் காலையில், எல்லோரம் ஒரே நேரத்தில் பள்ளிக்கு கிளம்புவதர்க்கு.
  • நாங்கள் வளர வளர அவ்வப்போது அம்மாவையும் அப்பாவையும் ஏதாவது ஒரு ஊர்க்கு வேறு பள்ளிக்கு மாற்றிவிடுவார்கள்.
  • அப்பாவும் அம்மாவும் ரொம்பநாட்கள் மன்னார்புரத்தில் உள்ள தூய மரியன்னை பள்ளியில் வேலை பார்த்தார்கள். நாங்கள் எங்கு நடக்கும் அனைத்து விழா, நிகழ்வுக்கும் செல்வோம். எங்களுக்கு அங்கு நிறைய நண்பர்கள், நட்பான குடும்பங்கள். எல்லோரும் ரொம்ப பாசமாக இருப்பார்கள்; இன்றும் தொடர்கிறது எங்கள் நட்பும், உறவும்.
  • மீண்டும் அம்மா கள்ளிகுளம் புனித அலாய்சியுஸ் நடுநிலைப் பள்ளியிலும், அப்பா மூலைக்காடு புனித இராயப்பர் நடுநிலைப் பள்ளியிலும் மாற்றலாகி ரொம்பநாளாய் வேலை பார்க்கிறார்கள.

பணி உயர்வு, பணி மாற்றம் மற்றும் பல மாற்றங்கள்:
  • அப்பாவிற்கு தலைமை ஆசிரியர் பணி உயர்வு வரும் நேரத்தில் அருட்தந்தை (கத்தோலிக்க திருச்சபை பள்ளிகளின் பொறுப்பாளர் அந்த ஊர் பங்கு அருட்தந்தை தான்) தன் சுய நோக்கத்திற்காக அவரை பிரச்சனை செய்து வேறு ஊர்க்கு [வடக்கன்குளம் பக்கத்தில் பத்திநாதபுரம்] மாற்றி தலைமை ஆசிரியர் பணி உயர்வு கொடுக்கிறார். தினமும் 15, 15 மொத்தம் 30 கி.மீ. தூர பயணம். மிகவும் கஷ்டப்பட்டார்கள்.
  • அப்போது நான் கல்லூரி படிப்பிற்காக சென்னை சென்றேன். சென்னையில் ஸ்ரீ சிவ சுப்பிரமானிய நாடார் (S.S.N) பொறியியல் கல்லூரியில் என்னுடைய தகவல் தொழில் நுட்ப [B.Tech in IT] படிப்பு. நான்கு வருடமும் கல்லூரி விடுதியில் தான்.
  • தங்கச்சி பள்ளி படிப்பு முடிந்ததும் அருகிலுள்ள கல்லுரியில் இளங்கலை தகவல் தொழில் நுட்ப படிப்பில் [B.Sc in IT] சேர்ந்தாள். வீட்டிலிருந்தே சென்று வருவாள்.
  • பக்கத்தில் பெரிய ஊரான வள்ளியூரில் வீடு கட்டி அங்கு சென்று கொஞ்ச நாள் இருந்தோம். அங்கு அவ்வளவாக அம்மாவிற்கும் அப்பாவிற்கும் பிடிக்காததால் அதை வாடகைக்கு கொடுத்து விட்டு மீண்டும் கள்ளிகுளம் வீட்டிற்கு வந்து விட்டோம்.
  • அப்பாவிற்கு மீண்டும் மாற்றம். இப்போது வேலை பார்க்கும் இலங்குளம் R.C. தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி மாற்றம் பெற்றார்கள்.
  • எனக்கு படிப்பு முடிந்ததும் சென்னையில் வேலை கிடைத்தது. ஹச்.சி.எல். தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் இளம் பொறியாளர் வேலை.
  • தங்கை படிப்பு முடிந்து தான் விரும்பிய அதே கல்லூரி மூத்த மாணவருடன் காதல் திருமணம் செய்து கொண்டாள். அப்பா அம்மா விற்கு ரொம்ப வருத்தம். அப்பாவிற்கு தங்கச்சி என்றால் மிகவும் பாசம். ஒருவழியாக இன்று அனைத்தும் சரியாகி விட்டது.
  • அப்பாதான் அவளை B.Ed. படிக்க வைத்தார்கள். முதலில் தங்கச்சியும் கணவரும் யாருடைய தயவும் இல்லாமல் கொஞ்சம் கஷ்டப்பட்டார்கள். இப்போழுது நன்றாக இருக்கிறார்கள்.

அப்பாவின் சேவைப் பணி:
  • அப்பா சிறுவயது முதலே உறவினர்களுக்கும், உதவி என வருபவர்களுக்கும் மனம் விரும்பி முடிந்தவரை உதவுவார்கள். பல திருமணங்களை நடத்தி வைத்துள்ளார்கள். அவர்கள் தேவையை கஷ்டம் பார்க்காமல் கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு மகிழ்ச்சியே பிறர்க்கு உதவுவதுதான்.
  • இந்தமாதிரி சூழ்நிலையில், குருத்துவ படிப்பில் அவருடைய நண்பரான அருட்தந்தை. ஜேம்ஸ் பீட்டர் அவர்களின் வழிகாட்டலில், எங்கள் ஊர் கள்ளிகுளத்தில் 12 நண்பர்களுடன் இணைந்து 12 அப்போஸ்தலர்களாக, பராமரிப்பின்றி இருக்கும் முதியர்வர்களுக்கு உதவ கிறிஸ்துவின் சேனை எனும் சபையை (குழு) ஆரம்பித்தார்கள்.
  • சபையில் இருக்கும் அனைவரும் சிறுது பணம் போட்டு, பிற நல்ல உள்ளங்களிடம் பணம் வாங்கி சேர்த்து, அந்த பகுதியில் பராமரிப்பில்லாமல் இருக்கும் வயதானவர்களுக்கு அவர்களின் ஒரு மாத சாப்பாட்டு தேவைக்கு மளிகைப் பொருளை அவர் உறவினர்களிடம் வாங்கி கொடுப்பார்கள்.
  • இந்த சபை அப்போஸ்தலர்கள் அடிக்கடி அவர்களை சென்று கண்காணித்தும் அவர்களுக்காக செபம் செய்தும் வருவார்கள்.
  • சபை உறுப்பினர்கள் அனைவரும் அவ்வப்போது குடும்பத்தோடு பக்கத்து ஊர்களில் உள்ள கருணை இல்லங்களுக்கும், கோயில்களுக்கும், இறை சுற்றுலா பயணத்திற்கும் செல்வது வழக்கம். நானும் சில நேரத்தில் அவர்களுடன் தூத்துக்குடி, வேளாங்கண்ணி, பூண்டி யிலுள்ள கோவில்களுக்கு சென்றுள்ளேன். உண்மையிலேயே ஒரு அர்த்தமுள்ள பணியாக இருக்கிறது.
  • நான் சென்னை ஹச்.சி.எல்.லில் ஐந்தரை ஆண்டுகள் பணி செய்து விட்டு மதுரை ஹனிவேல் மென்பொருள் நிறுவனத்தில் டெக்னிகல் லீடர் ஆக வேலைக்கு சேர்ந்தேன். அப்பா அம்மாவிற்கும் பக்கமாக வந்ததில் மகிழ்ச்சி.

ஓய்வுக்கான தருணம், நமக்கான பாடம்:
  • 35 வருட ஆசிர்யர் பணி, அதனை சார்ந்தே பொதுச்சேவை பணி, ஆசிர்வாதம் சார் என்றே அழைக்கப்படுகிறார்கள். [என்றும் அழைக்கப்படப்போகிறார்கள்] ஓய்வு என்றதும் அப்பாவிர்க்கு கொஞ்சம் வருத்தமே.
  • நிரந்தர ஆசிரியர் பணியிளிருந்துதான் ஓய்வு, அவருடைய நிரந்தரமான மனிதாபிமான சேவை பணியிலிருந்தல்ல...
  • இன்றும் அவருடைய பழைய மாணவர்கள் வந்து மரியாதை நிமித்தமாக பேசுவதும், நன்றி சொல்வதும் எனக்கு புல்லரிப்பை ஏற்படுத்தும். நிறைய மாணவர்கள் இன்று ஊரிலும் வெளியூரிலும் பெரிய, சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் உள்ளார்கள். அப்பா எனக்கு தெரிந்து எந்த உதவிக்கும் யாரையும் பார்த்ததில்லை.
  • நான் படித்த, எனக்கு அவர் கற்பித்த, எல்லோருக்குமான அவருடைய வாழ்க்கை பாடம் என்னவென்றால் திறமையை வளர்த்தல், உயர்ந்த கல்வி, நல்ஒழுக்கம், பணிவு, தாழ்ச்சி, அன்பு, பாசம், உதவும் குணம், பொறுமை, நீதி, நேர்மை, கடமை, நாணயம், உறுதி, ஊக்கம், நம்பிக்கை, நல்ல மனிதர்களுடன் நட்பு, போராட்டமான நேரத்திலும் அமைதி, சமாதானம், சந்தோசம், எத்தகைய மகிழ்ச்சியிலும் மிகவும் துள்ளாமல் தாங்க முடியாத துக்கம் வரும் போதும் ஏற்றுக்கொள்ளும் சமநிலை மனது, இவை எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாய், இவை எல்லாவற்றிர்க்கும் மேலாய் கடவுள் மேல் அளவு கடந்த விசுவாசம்...
அப்பாவைப் பற்றி நினைத்ததும் உடனே என் நினைவுக்கு வரும் இரண்டு கூற்று...
பைபிள்:
உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறரிடத்திலும் அன்புகூருவாயாக இயேசுக் கிறிஸ்து (மத்தேயு 22:39)

குறள்:
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
[விளக்கம்: அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்]
தொடர்ந்து அவர்கள் உடல், உள்ள, ஆன்ம நலனுக்காக ஜெபிக்கும், விரும்பும் நன்றியுள்ள மாணவன், பாசமுள்ள மைந்தன் நான்... நண்பர்களையும் அவருடைய மாணவர்களையும் தொடர்ந்து அவருக்காக ஜெபம் செய்யவும், ஊர்க்கு வரும்போதெல்லாம் அவரை சந்திக்கவும், மேலும் மேலும் வளர்ந்து அறவழியில் நன்றியோடு வாழவும் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

வியாழன், அக்டோபர் 07, 2010

பஞ்சபூதங்கள், மனிதன், நாம்!!!

[பஞ்சபூதங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்ததில் கிடைத்த குறள் மற்றும் என் சிந்தனைகள்]

குறள் 271
அறத்துப்பால்/Virtue/Araththuppaal
அதிகாரம்/Chapter/Adhigaram 28

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்

விளக்கம்
ஒழுக்க சீலரைப் போல உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்து அவரது உடலில் கலந்துள்ள நிலம், நீர், தீ, காற்று, வெளி எனப்படும் பஞ்சபூதங்களும் தமக்குள் சிரித்துக் கொள்ளும்

Couplet 271
Who with deceitful mind in false way walks of covert sin,
The five-fold elements his frame compose, decide within

Explanation
The five elements (of his body) will laugh within him at the feigned conduct of the deceitful minded man

Transliteration
Vanja Manaththaan Patitrozhukkam பூதங்கள்
Aindhum Akaththe Nakum
[உதவி: நண்பனின் இணையதலதிளிருந்து
http://www.gokulnath.com/thirukurals]

அன்பெனும் நதியில்(நீரில்) குளித்து,
நம்பிக்கை, மன்னிப்பு பண்பெனும் நிலத்தில் ஊன்றி,
அமைதி, சமாதானம், தாழ்ச்சி, இரக்கம் எனும் காற்றினில் கரைந்து,
அறிவு, ஞானம் பெற்று, இறப்பெனும் நெருப்பில் எவ்வேளையும் வீழ இருக்கும்..,
இழிநிலை பிறப்பை வென்று, உயர்நிலை ஆகாயத்தை அடைய முனையும் கடைநிலை மனிதன்... ... ... (நாம்)!

செவ்வாய், செப்டம்பர் 21, 2010

மதங்களை கடந்த ஆன்மிகம்! (பாகம் 1)

செப்டெம்பர் 17, 18, 19 தேதிகளில் சபரி மலைக்கு என்னுடைய project team யுடன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது... மிகவும் சிறந்த அனுபவமாக இருந்தது... அதைப் பற்றிய பதிவு...

தயாரிப்பு
சபரிமலை நோக்கிய பயணம்
சபரிமலையில் நிகழ்வுகள்
ஊர்க்கு திரும்புகையில்

தயாரிப்பு
கிறிஸ்துவனாகிய நான், சபரிமலைக்கு செல்ல தூண்டியது இரண்டு விடயங்கள்... முதலாவது பல இந்து நண்பர்கள் மிக ஆர்வமாக சபரிமலை செல்ல தூண்டப்படுவத்தின் ஈர்ப்பு என்ன என்ற ஆர்வம் (என்னுடைய மேனேஜர் மிக மிக ஆர்வம் உடையவர், மாதந்தோரம் முதல் ஐந்து நாள்கள் நடை திறக்கையில் இரண்டு நாள்கள் தவறாமல் சில ஆண்டுகளாக சென்று வருகிறார். அதைப்பற்றி அவர் பேசாத நாட்கள் கிடையாது எனலாம்), இரண்டாவது அதற்காக அவர்களை அவர்கள் தயாரிக்கும் விதம்... (நாற்பது நாட்கள் விரதம், மாலை அணிவார்கள், சுய சுத்தம், காலை மாலை பச்சை தண்ணீர் குளியல், தினமும் ஆலயத்தில் பூஜை, இது போக கெட்டப்பழக்கங்கள் இருந்தால் விட்டு விட வேண்டும், தீய வார்த்தைகள் பேசக்கூடாது, தீய எண்ணங்களை கைவிட வேண்டும், பிற பக்தர்களையும் மனிதர்களையும் சாமி என்றழைத்து யாவருடனும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்... பலருக்கு இவற்றையெல்லாம் கடைப்பிடிப்பது மிக கடின விடயம்... அதிலும் குறிப்பாக கார்த்திகை, மார்கழி மாதங்களில் இதை கடை பிடிப்பது மிக மிக கடினம், அந்த இரு மாதங்கள் தான் சபரிமலை season என அழைக்கப்படுகிறது)

இந்த பயணத்திற்காக நாங்கள் எங்களை மிகவும் தயாரிக்கவில்லை. ஒரு வாரம் மட்டுமே தயாரிப்பு. குறிப்பாக நான் மாலை கூட அணியவில்லை. என்னுடைய ஆர்வத்தினால் கட்டுப்பாடுகளை சிறிது தளர்த்தி அவர்களுடன் இந்த தெய்வீக பயணத்தில் இணைத்து கொண்டார்கள்...

சபரிமலை நோக்கிய பயணம்
செப்டம்பர் 17 வெள்ளிக் கிழமை, மதியம் 2.30 மணிக்கு பயணம் மதுரையில் இருந்து சபரிமலை நோக்கி ஆரம்பமானது... மொத்தம் 7 சாமிகள், 2 வாகனம்... மதிய உணவும் இரவு உணவும் இரு நண்பர்கள், வீட்டில் தயார் செய்து கொண்டுவந்திருந்தார்கள்...

உசிலம்பட்டி முன்பு இரயில்வே கேட் அருகே மரததடியில் மதிய உணவு சாப்பிட்டோம். உணவினை அங்குள்ள ஏழை மக்களிடம் பகிர்ந்துகொண்டோம். எலுமிச்சை சாதம், சட்னி, தயிர் சாதம்... சாப்பாடு மிகவும் அருமையாக தயார் செய்து இருந்தார்கள்.

அருமையான மலைவழி பயணம், அதுவும் வண்டி ஒட்டாமல் பின்னிருக்கையில் உட்கார்ந்து இயற்கையை ரசித்தும் வெட்டி கதைகளையிட்டும் செல்வது எப்படி இருந்தது என்றால்... சொர்க்கத்திற்கு செல்கையில் கடவுள் இடம் அதைப்பற்றி வினவுவது போல்... இனிமையான பொழுதுகள்... மிகவும் மகிழ்ச்சியோடு பயணித்தேன்...

பிற்பாதி பயணத்தில் சில புதிய விடயங்களை பத்தி விவாதிக்க முனைந்தது. மனிதனுடைய ஆத்மா (soul) பற்றிய ஒரு உரையாடல் அது... Dr. Newton என்பவர் 'past life regression' பற்றிய ஆராய்ச்சியில் இறப்பிற்குப்பின் நிகழும் விடயங்களை, அதாவது உடலில் இருந்து ஆத்மா எப்படி பயணிக்கிறது, ஆத்மாக்களின் வகைகள் என்ன, மறுபிறவி என பல ஆயிரம் மக்களிடம் மனோதத்துவ ரீதியில் ஆராய்ச்சி செய்திருக்கிறார். அதைப்பற்றி நுணுக்கமாக விவாதித்தோம். (மேலும் விடயம் அறிய இந்த வலைக்கு செல்லவும் http://www.near-death.com/newton.html. ) ஒவ்வொரு மதத்திலும் ஆத்மா பற்றி எப்படி நோக்குகிறார்கள், சொர்கத்திற்கும் நரகத்திற்கும் ஆத்மாவின் தொடர்பு என்ன, குழந்தைகளுக்கு வரும் கனவுகள் என நீண்டது இந்த உரையாடல்...

சரியாக 9.30 மணிக்கு சபரிமலை அடிவாரம் பம்பை நதியை அடைந்தோம்... அங்கு நண்பர் கிருஷ்ணன் காத்துக்கொண்டு இருந்தார். மின் அலுவலகத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு இரவு உணவை முடித்தோம்... சப்பாத்தியும் தக்காளி தொக்கும், என்ன ருசி...

இரவு மணி 10.30, பம்பையில் நீராடிவிட்டு மலையில் நடக்க ஆரம்பித்தோம்... மலையிலுள்ள கோவிலுக்கு மொத்தம் 7 கிமீ. முற்றிலும் மலைப்பாதை. ஆரம்பத்தில் ஏதோ எளிதாக இருப்பது போல் தோன்றியது. பின்னர் செங்குத்தாக ஏற வேண்டி இருந்தது. நான் சிறிது தூரத்திலேயே மிகவும் களைப்பு ஆனேன். நண்பர்கள் தைரியம் குடுத்தார்கள், சுமையை பகிர்ந்து கொண்டார்கள். சிறுது எளிதானது பயணம்... அதன் பிறகு கொஞ்சம் கதை பேசிக்கொண்டு நடையை கட்டினோம்... ஒரு இடத்தில் Lime Soda கிடைத்தது... உடலுக்கு கொஞ்சம் புத்துணர்ச்சி கிடைத்த மகிழ்ச்சி...

மலையை அடைந்தோம்... சந்தோசமாக இருந்தது மனதிற்கு... போனதும் தயார் நிலையில் இருந்த அறையில் 7 பேரும் ஓய்வெடுத்தோம்...

சபரிமலையில் நிகழ்வுகள்
காலையிலேயே எழுந்து குளித்து சாமி பார்க்க தயாரானோம்... அச்டாபிஷேகம், சிறப்பு தரிசனம், சாப்பாடு, ஓய்வு, சாப்பாடு, கதைகள், அரட்டைகள், விளையாட்டு செய்திகள், சச்சின் டெண்டுல்கர், கடவுளர் கதைகள், மதங்கள், ஆன்மிகம் என சிலபல உரையாடல்... பொழுது இனிதே கழிந்து கொண்டிருந்தது...

மேலும் விரிவாக தொடர்வேன்...

படங்கள் இந்த வலை இணைப்பில் உள்ளது... பயனடையுங்கள் நண்பர்களே :). http://picasaweb.google.co.in/snabakvinod/SabarimalaSep17To19?authkey=Gv1sRgCKres9fCo8iEDw#

படித்த நண்பர்கள் comment கொடுக்கலாமே...

வியாழன், செப்டம்பர் 09, 2010

இன்று புதிதாய் பிறந்தேன்

இவ்வுலகில் இன்றையச் சூழலில் நிறம் மாறும் மனிதர்களிடையில் வாழ்வது மிக கடினம்... அதனினும் கடினம் அப்படிப் பட்ட மனிதர்களிடமிருந்து சூழ்ச்சி எனும் அவர்கள் முடிச்சை அவிழ்த்து வெளியில் வருவது...

மிகவும் பிடித்த நண்பர்களிடமே ரொம்ப நேரம் இருப்பது சிலருக்கு சலிப்பு தட்டும் இந்த அதிவேக உலகில், புதிதாய் கிடைத்த நண்பனை(?) ஏற்று நடப்பது சிறிது சிரமமே... அந்த சிரமத்தையும் மீறி நட்புணர, "விட்டு கொடுக்கும் மனநிலை" மிகவும் அவசியம் இருவருக்கும்... அதில் ஒருவர் பின்தங்கினாலும் படகு சுமுகமாக பயணிக்காது... சரி, விட்டு கொடுப்பினும் பிரியலாம் என்ற எண்ணம் ஒருவருக்கு வந்தாலும் ஒருவருக்கொருவர் எதிரியாய் பாராமல் பிரிவது சிறப்பு... சிறிய மனப்போராட்டம் இருந்தாலும் காலப்போக்கில் சரியாகும்... இப்படி ஒரு நண்பனிடம்(?) இருந்து கடந்த வாரம் பிரியும் சூழ்நிலை... மனசுக்கு கடினமாக இருந்தாலும் ஒரு சுமை குறையும் என்ற நம்பிக்கை இருந்தது...

மனசுக்குள் உள்ள வலி, வேலையையும் உடலையும் பாதிக்கிறது... ஒரு பெரியனாட்டமில்லாமல் ஒரு வாரமாக அலுவலகப் பணி சென்றுக்கொண்டுருக்கையில் சரி உடல் பிரச்சனையாவது சரி பண்ண மருத்துவரை அணுகி நலமடைய வழி செய்வோம் என்ற கருத்து மனதில் வருகிறது...

நேற்று மருத்துவரை அணுகுகையில், நடந்த உரையாடல் கீழே...

"அய்யா ஒரே தலைவலியாக இருக்கிறது, உடல் வலிக்கிறது, எப்போதும் tired ஆகவும் காய்ச்சல் வரும் என்பது போன்ற உணர்வும் இருக்கிறது"

மருத்துவர்: உங்க வயது என்ன தம்பி?

"28"

மருத்துவர்: அப்படின்னா சர்க்கரை நோய் வர வாய்ப்பில்லை... உங்க எடை எவ்வளவு...

"74"

மருத்துவர்: பிரச்சனை இங்கதான் இருக்கு... தம்பி நல்லா உடற்பயற்சி செய்யுங்க... இப்பவே எடைய குறைக்கிலைனா பின்னாடி சக்கரை நோய், BP, Heart Attack எல்லாம் வரும்... எப்படியாச்சும் எடைய அறுபத்தஞ்சா ஆக்கிருங்க... எல்லா பிரச்சனையும் பறந்து போயிரும்... நீங்க தன்னாலே உற்சாகமா ஆயிருவீங்க...

"உடற்பயற்சி தினமும் செய்யிறேன் (சும்மா அடுச்சு விட வேண்டியதுதான, வந்து பாக்கவா போறாரு :)). எவ்வளவுதான் செய்தாலும் எடை குறைய மாட்டேங்குது... இல்லையா, உடம்பு சரியில்லாத மாதிரியே தோணுது, ஏதாவது மருந்து குடுங்க"

மருத்துவர்: அப்படி இல்லப்பா, நீ உடற்பயிற்சி செய்தால் மட்டும் போதாது... சாப்பாட்ட குறைக்கணும்... தம்பி, உங்கள பாத்தாலே காலையிலே 10 இட்லி, 8 பூரி சாப்பிடுபவர் மாதிரி தெரியுது (இவருக்கு எப்படி தெரிஞ்சுது? சரியா சொல்றாரு)... காலையில 3 இட்லியா சாப்பாட்ட குறைச்சிருங்க... எல்லாம் சரியாயிடும்...

"இல்ல இல்ல நான் கம்மியாதான் சாப்பிடுறேன்... எப்போதும் diet தான்(கீழ விழுந்தாலும் மீசையில மண் ஓட்டக்கூடாதே :))"

மருத்துவர்: தம்பி, எல்லோருக்கும் இந்த தலைமுறை இளைங்கருக்கு இப்போ இந்தமாதிரி பிரச்சனை நிறைய இருக்கு... வயசுக்கு அதிகமான மனசுமையே இதுக்கு காரணம்... இதுக்கு மருந்தெல்லாம் கிடையாது... ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்காதிங்க... மன நிம்மதியான, உடல் நலத்தோடு ஆரோக்கியமான, மகிழ்ச்சியான நிலையில் எப்போதும் இருக்க ஒரே வழிதான்... பற்றட்ட வாழ்க்கை வாழனும்ப்பா.... (மருத்துவர் கிட்ட இருந்த இத யாரும் எதிர்பாத்திருக்க மாட்டங்க) (இப்போ முதல் பத்தி படிங்க).

"????*&*)(^%^!!!"

வியாழன், ஆகஸ்ட் 19, 2010

ஒரு பெரும் பொருளாதார விடுதலைக்கான போராட்டம்

சுவிஸ் வங்கி… 90 இலட்சம் கோடி… மலைக்க வைக்கும் கள்ளப் பணம்!



உலகின் கள்ளப் பணத்தைப் பதுக்கி வைக்கும் சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் மட்டுமே ரூ 70 லட்சம் கோடி, அதாவது 1.40 ட்ரில்லியன் டாலர் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது நினைவிருக்கலாம். இதுகுறித்து டிஎன்ஏ நாளிதழ் ஒரு கட்டுரையைக் கூட வெளியிட்டிருந்தது. அது வெளியாகி சில மாதங்கள் உருண்டோடிவிட்டன. இன்றைக்கு அந்தப் பணத்தின் அளவு ரூ 90 லட்சம் கோடிக்கு மேல் என்கிறார்கள். விரைவில் செஞ்சுரி அடித்துவிடும்!

இந்தப் பணத்தைத்தான் இந்தியாவுக்குக் கொண்டு வருவோம் என்று முன்பு பிஜேபிக்காரர்களும், காங்கிரஸாரும் முழங்கினார்கள். கட்டாயம் கொண்டு வர முடியாது என்று ஒருவரையொருவர் பலமாக நம்பியதாலேயே இந்த முழக்கம்!

இவ்வளவு பணத்தை சும்மா வைத்துக் கொண்டு, மாதச் சம்பளக்காரர்களையும் நடுத்தர வருமானம் கொண்டவர்களுக்கும் வரிமான வரி வரம்பை ரூ 2 லட்சம் வரை ஏற்றுவதற்கே வருடக்கணக்கில் யோசித்துக் கொண்டிருக்கிறது இந்திய அரசு… என்ன தேசமோ!

இருக்கட்டும்…

70 லட்சம் கோடின்னா… எவ்வளவு? அதை வைத்து என்னென்ன செய்ய முடியும் என்றெல்லாம் ஜஸ்ட் ஒரு கணக்குப் போட்டுப்பார்த்தால்… பிரமிப்பில் தலை கிர்ரடித்துவிடும்.

இதோ… அந்த விவரமும்…

1. உலகில் உள்ள 180 நாடுகளில் நமது நாட்டினரின் பணம்தான் சுவிஸ் வங்கியில் உள்ள மிக உச்ச அளவு தொகையாகும். கருப்புப் பணத்தின் பிறப்பிடமாக இந்தியா உள்ளது. சற்றே எண்ணிப் பாருங்கள்… சுவிஸ் வங்கியில் உள்ள 70 லட்சம் கோடி ரூபாய் இந்தியர்களுக்கு சொந்தமானது என்றால் நமது இந்திய நாடு எவ்வளவு பெரிய பணக்கார நாடாகும்.

2. தங்கள் வங்கிகளில் உள்ள 70 லட்சம் கோடி ரூபாய்க்கு சொந்தமானவர்களின் பெயர்களை வெளியிடக் கோரி இந்திய அரசாங்கம் கேட்டால் அப் பெயர்களை வெளியிட சித்தமாக இருப்பதாக சுவிஸ் அரசாங்கம் இந்திய அரசாங்கத்திற்கு அதிகாரபூர்வ கடிதம் எழுதியுள்ளது.

3. சுவிஸ் அரசு நமது இந்திய அரசுக்கு எழுதிய அதிகாரபூர்வ கடிதத்தின் அடிப்படையில் இச்செய்தி ஏற்கனவே கடந்த 22-5-2008-இல் டைம்ஸ் ஆப் இந்தியா உள்ளிட்ட நாளிதழ்களில் வெளியாகி உள்ளது.

4. ஆனால் இதற்கு நமது இந்திய அரசு எந்த பதிலையும் அனுப்பவில்லை. அதாவது 1947 முதல் 2008 வரை சுவிஸ் வங்கியில் வைப்பீடு செய்யப்பட்டுள்ள பணத்தின் விவரங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்கும்படி இந்திய அரசானது சுவிஸ் அரசுக்கு பதில் கடிதம் எழுதவே இல்லை. மேலும் இது குறித்து எதிர்க்கட்சியினரும் அப்போது எந்த ஆர்வமும் கட்டவில்லை.

காரணம், சுவிஸ் வங்கியில் உள்ள பணத்தில் ஒரு பெரிய சதவிதம் நமது இந்திய அரசியல்வாதிகளுக்கு சொந்தமானது. அப்பணம் நமது இந்தியர்கள் ஒவ்வொவருக்கும் சொந்தமானது என்றுதான் சொல்வதுதான் பொருத்தமானதாகும். தேர்தலின்போது மட்டும் கூப்பாடு போட்டார்கள்.

5. இந்தப் பணம் நமது நாட்டுக்குச் சொந்தமானது. இவ்வளவு பெரிய தொகையில் என்னென்ன செய்யலாம் தெரியுமா? இந்தியா தனது அயல்நாட்டுக் கடனை 13 தடவை திருப்பிச் செலுத்தலாம். இத்தொகையில் இருந்து வரும் வட்டியை கொண்டு நமது மைய அரசின் ஓராண்டு பட்ஜெட் செலவை பற்றாக்குறை இல்லாமலேயே சமாளிக்கலாம். மக்கள் எந்த வரியையும் அரசுக்கு செலுத்த வேண்டியிருக்காது. மேலும் 45 கோடி ஏழை குடும்பங்கள் ஒவொன்றுக்கும் தலா 1 இலட்சம் ரூபாய் வழங்கலாம்.

6. சுவிஸ் வங்கியில் மட்டும் 70 இலட்சம் கோடி ரூபாய் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று கணக்கெடுத்துக் கொண்டால், மற்ற வங்கிகளில் எவ்வளவு பணம் வைப்பீடு செய்யப்பட்டிருக்கும் ? சற்றே கற்பனை செய்து பாருங்கள். இந்தியர்கள் தங்கள் பணத்தை எவ்வளவு இழந்துள்ளார்கள்? நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது! இங்கு இன்னொரு இடர்பாடு உள்ளதும் கவனிக்கத்தக்கது. அதாவது சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் இறந்து விட்டால், அவரது கணக்கில் உள்ள பணத்திற்கு சுவிஸ் வங்கியே உரிமையாளராகிவிடும்.

7. சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்திய பண முதலைகள் ‘கர்ம வினை’ என்ற சித்தாந்தை சுத்தமாக மறந்து விட்டார்களா? ஊழல், சுரண்டுதல் ஆகிய முறையற்ற வழிகளில் கிடைத்த அப்பணத்தை அவர்கள் தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ள நினைத்தாலோ/பயன்படுத்த முனைந்தாலோ அப்பணம் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எத்தகு கேடுகளை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் சிந்திக்க மறந்து விட்டார்கள்.

8. இந்த உண்மை அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் தங்கள் பங்குக்காக காத்திருக்கிறார்கள்.

அன்றாடங்காய்ச்சிகள் இதையெல்லாம் படித்துவிட்டு ஒரு பெருமூச்சுடன் அன்றைய நாள் கழிந்தால் போதும் என ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்.

எனினும் இதுவும் ஒரு விடுதலை போராட்டமே”. ஒரு பெரும் பொரளாதார விடுதலைக்கான போராட்டம். யார் எப்படி முன்னெடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

9. சுவிஸ் வங்கியில் உள்ள மேற்படி பணம் இந்திய மக்களின் ரத்தத்திலும், வியர்வையிலும் விளைந்தது. அது மீண்டும் இந்திய நாட்டிற்க்கு கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோஷத்துக்கு இன்னும் கூட வலு சேரவில்லை என்பதுதான் இதில் மகா சோகம்.

10. இந்திய ஆட்சியாளர்கள் சரியான முயற்சிகளை மேற்கொண்டு ஜி 20, ஐஎம்எப், எக்மண்ட் குழு போன்றவர்களிடம் இந்தப் பிரச்சினையை முன்வைத்து வலியுறுத்தல்களைத் தொடங்க வேண்டும். அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி இந்த வேலையை எப்போதோ ஆரம்பித்துவிட்டன.

இந்தியா ஆரம்பிக்குமா?

தகவல் உதவி: http://www.envazhi.com/?p=19245