வெள்ளி, அக்டோபர் 29, 2010

அன்பு அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


அன்பு அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


என் தந்தையின் பிறந்தநாளன்று தேசத்திற்கே விடுமுறை... ஆம்... தேசப்பிதா பிறந்தநாளில் பிறந்தவாங்க தன் எங்கள் பிதா[அப்பா]... என் தந்தையும் என்னுடைய பாசமிகு எட்டாவது வகுப்பு ஆங்கில ஆசிரியருமான, இப்பொழுது நாங்குநேரி தாலுஹா பரப்பாடி-இலங்குளம் ஆர்.சி. பள்ளி தலைமையாசிரியராக பணி புரிந்து வரும் திரு. எம். ஆசீர்வாதம் B.Lit., M.A., M.Ed. சார்க்கு, அக்டோபர் 2 ஆம் நாளோடு 58 அகவை நிறைவடைந்தது... இந்த மாத இறுதியோடு [அக்டோபர் 31] அவர்களுக்கு ஓய்வு! ஆசிரியர் பணியிலிருந்துதான் சமுதாயப்பணியிலிருந்தல்ல... என் வாழ்கையை அவர்களோடு சேர்ந்து இசைக்கையில் அவரிடம் நான் படித்த பாடங்கள் மற்றும் அவர்களுடைய அனுபவங்கள் ஒரு பதிவாய் இங்கே!

பிறப்பு:
  • பிறந்தது 1952 ல் நெல்லைச் சீமை வண்டலம்பாடு கிராமத்தில். அதாவது வண்டல்மண் நிரம்பிய பாடாம்(பாடு என்றால் நீர்நிலை அருகில் இருக்கும் சமவெளி போன்ற இடம்).
  • மரியான் அன்னம்மாள் தம்பதியரின் 11 வது குழந்தை (தாதாவுக்கு மொத்தம் 12 குழந்தைகள், 10 புதல்வர்கள், 2 புதல்விகள்).
  • சிறிது வசதி என்றாலும் இவ்வளவு குழந்தைகளை வளர்க்க ரொம்ப கஸ்டபட்டிரிக்கிறார் தாத்தா. விவசாயம், பனை ஏறுதல், மீன் விற்றல் அவர் தொழில்கள்... வரட்சியான நேரமது, மாறி மாறி தொழில் செய்வார்...
  • கஸ்டத்திலும் தாத்தா கூறுவாராம், "நான் இலட்சாதிபதி, எனக்கு சொத்து என் 12 இலட்சங்கள்(குழந்தைகள்)".

வளர்ந்தது:
  • கிராமத்தில் பள்ளி கிடையாது... 1 கி.மீ. தூரத்தில் பக்கத்துக்கு கிராமமான மூலைக்காட்டில் தான் எட்டாவது வரை பள்ளி இருக்கிறது... படிப்பதில் அப்பா சிறுவயதிலிருந்தே அதிக விருப்பம். இரண்டாவது அண்ணன் ஊரின் முதல் வாத்தியார், அவரால் கிடைத்த ஊக்கம்...
  • உடன்பிறப்புகள் பலரும் அதிக விருப்பம் இல்லாத காரணத்தினாலும் வறுமையினாலும் வெளியூர்க்கு வேலைக்கு செல்கின்றனர்.
  • எல்லோரும் வெளியூர்க்கு வேலைக்கும் சென்றாலும், கூடப்படித்த நண்பர்கள் கூலி அல்லது பிற தொழிலுக்கு ஊரிலேயே சென்றாலும், சிலர் சின்ன வயதிலேயே பள்ளிக்கு செல்லாமல் கெட்ட வெளியில் சென்றபோதும், அப்பா மட்டும் மனம் பிறழாமல் பள்ளி சென்று சிறப்பாக படித்தார்... தாத்தாவும் நல்ல ஆதாரவை அளித்தார்...
  • ஒன்பதாவது படிக்கும்போது ஒருநாள் குருசடியில் சென்று செபம் செய்ய அப்பா சென்றிருந்தபோது திடீரென சித்தப்பா ஓடிவந்து தங்கள் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என அழைத்து சென்றார். அப்பாவும், சித்தப்பாவும் வீடு வருவதற்குள் பாட்டி இறந்து விட்டார்கள். அப்பாவின் வேதனை சொல்லிலடங்கா...
  • அப்பா விடாமுயர்ச்சியால் நடுநிலை பள்ளி படிப்பை முடித்து, அப்புறம் 3 கி.மீ. தூரத்திலுள்ள கள்ளிகுளத்தில் உயர்நிலை பள்ளி படிப்பை தொடர்ந்து படித்து, அந்த காலத்திலேயே S.S.L.C (11 வது வகுப்பு)ல் 400 க்கு மேல் மதிப்பெண் வாங்கினார்கள். எனவே ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இடம் வீடு தேடி வந்தது. அப்பொழுது கல்லூரியில் சேர்வதே அபூர்வம், அதுவும் ஆசிரியர் பயிற்சியில் சேர்வது மிக மிக அபூர்வம், கடினம்.

ஆசிரியர் பயிற்சி:
  • கோவில்பட்டி அருகே 'போளி'க்கு பேர்போன கடம்பூரை ஒட்டினார்போலுள்ள பரிவல்லிக்கோட்டை என்ற ஊரில் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்தார்கள்.
  • சேரும்போது ஒரு வேடிக்கையான நிகழ்வு... அப்போதெல்லாம் கண்டிப்பாக ஆசிரியர் பயிற்சி பள்ளியில் வேட்டி கட்ட வேண்டுமாம். சேர்ந்ததுமே பாதி வாத்தியார் என்றுதான் சொல்வார்களாம்... அப்பா S.S.L.C வரை அரைக்கால் சட்டை தான் உடுத்தியிருக்கிரார்கள்... பெரியப்பா (அப்பாவின் வாத்தியார் அண்ணாச்சி) தான் வேட்டி வாங்கி அணிவித்து சேர்த்துவிட்டு வந்தார்களாம்.
  • அப்போது 'ஆதாரக்கல்வி' எனும் காந்திய கல்வி முறையாம்... அதாவது, படிப்புடன் தங்கள் தேவையை தாங்களே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்... விவசாயம், நூல் நூற்பது, சமையல், வாகன ஓட்டுனர் மற்றும் சரிபார்க்கும் பணி, புத்தக நிலையத்தை கவனித்து கொள்ளுதல், அது மட்டுமின்றி அவர்களே பாடமும் எடுப்பார்கள்... இவர்களை கண்காணிக்கவும் ஊக்குவிக்கவும் மட்டுமே ஆசிரியர்கள்...
  • இதுமட்டுமின்றி இந்த கல்வி முறையின்படி சிறப்பு ஊக்க ஊதியமும் உண்டு... மாதம் சுமார் 10 ரூபாய் கிடைக்குமாம்... எல்லாத்தேவையும் போக 5 ரூபாய் சேத்து வைத்து தாதாவுக்கு அனுப்பிவிடுவார்களாம்...
  • 1972 வது வருடம். S.S.L.C முடித்து 2 வருடத்தில் வாத்தியாராகிவிட்டார்கள்... வயது 19 தான்... ஆனால் வேலை கிடைப்பது அவ்வளவு எளிதல்ல... அதுவும் பள்ளியே இல்லாத கிராமத்தில் இருந்து ஒருவர்க்கு... அப்புறம் எப்படி ஆசிரியர் பணி...?

ஆசிரியர் பணி (தற்காலிகம்):
  • இந்த நாட்களில் அப்பா வாத்தியாராக கற்றுக்கொடுத்த பாடங்களை விட கற்ற பாடங்களே மிக அதிகம்...
  • தற்காலிக பணியாக சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளியிலும் பயிற்றுவித்துள்ளார். மூலைக்காடு, கள்ளிகுளம், ஆருபுளி, கிழவநேரி, சௌந்திரபாண்டியபுரம், காவல்கிணறு, முத்துநாடார் குடியிருப்பு, துறை குடியிருப்பு, இன்னும் பல ஊர்கள். பல பள்ளிகள்.
  • இந்நாட்களில் அவர் பகலில் அல்லது சாயங்காலத்தில் தாத்தாவை பார்த்துவிட்டு உயர்நிலைப் பள்ளியில் பணி புரியும் பெரிய சைன்ஸ் சாருடன் கள்ளிகுளத்தில் ஒரு வாடகை வீட்டில் இரவு தங்குவார்.
  • தனக்கு கிடைத்த முதல் சில மாத வருமானத்தில் தானே கல்லூரி சென்று பி.யு.சி. படித்தார்.
  • மீண்டும் தற்காலிக பணி... இவ்வாறு பல மாதங்கள் சென்றன...

குருத்துவ படிப்பு:
  • திடீரென ஒருநாள் தனக்கு குருத்தவ (அருட்தந்தை) பணிக்கு இறைவன் அழைப்பதாக உணர்ந்து மதுரையில் குருத்துவ கல்லூரியில் இணைந்து இறையியல் படிக்க ஆரம்பித்தார்.
  • அங்கே படிப்பது அவ்வளவு எளிதல்ல... முழுவதும் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும். ஏற்கனவே பாடமாக படித்திருந்தாலும் முன்அனுபவம் இல்லாமல் கொஞ்சம் பேசுவது கஷ்டம் தானே. அப்பொழுதுதான் அப்பா ஆங்கிலத்தில் நல்ல புலமை அடைந்தார்கள்.
  • அவ்வப்போது விடுமுறைக்கு ஊர்க்கு வருவார். அப்போது ஒருமுறை வரும்போது, சொந்த ஊர் பக்கத்தில் ஒரு நிலத்தை அவரும் மூன்று சகோதர்களும் சேர்ந்து வாங்க நினைக்க, தன் மொத்த சேமிப்பையும் கொடுத்துதவி (சிலரிடம் பணம் இல்லாதபோதும்) வாங்கினார்கள். நான்தான் துறவியாக போகிறேனே எனக்கெதுக்கு நிலம் என அந்த மூன்று பேர்கட்கு எழுத சொல்லிவிட்டார்.
  • அந்நாளில், தாத்தாவிற்கு இத்தனை புதல்வர்கள் இருந்தும் கவனிக்க சரியான ஆளில்லாமல் கஷ்டப்பட்டிருக்கிறார். இது அப்பாவிற்கு ரொம்ப கவலை அளிக்கவே குருத்துவ படிப்பை ஒரு வருடத்திலேயே விட்டு விட்டு தன் தந்தைக்காக ஊர் திரும்பினார்.
  • மீண்டும் ஊர் சுற்றுவட்டாரங்களில் தற்காலிக ஆசிரியர் பணி... அப்பொழுது ஒரு பெரிய விபரீதம் நடந்தது. அப்பாவிற்கு மிகவும் ஊக்கமாய் இருந்த பள்ளிகூடத்து அண்ணாச்சி இறந்துவிட்டார்கள். தாத்தாவும் சிறுது நாளில் இறந்து விட்டார்கள். மிகவும் கவலை அடைந்தார்கள் அப்பா.

நிரந்தர ஆசிரியர் பணி:
  • ஒரு வழியாக, ஆசிரியர் பயிற்சி முடிந்து எட்டு வருடங்கள் கழித்து 1980 ல் ஆசிரியர் வேலை கிடைக்கிறது. பக்கத்து ஊர் மூலைக்காட்டில் இடைநிலை ஆசிரியராக முதல் வேலை.
  • பலநாள் தவம் நிறைவேறியது. ஏற்கனவே தற்காலிக பணியினால் கிடைத்த அனுபவத்தால் திறம்பட பணி ஆற்றினார்கள்.
  • அப்போதும் கஷ்டம தீர்ந்தபாடில்லை. ஏனென்றால் ஊக்கமாக இருந்த அண்ணனும் இல்லை, தந்தையும் இல்லை. சகோதரர்கள் பெரும்பாலோர் வெளியூர். உள்ளூர் அண்ணன்களும் அவர்கள் குடும்ப வேலையில் கவனமாய் இருந்தார்கள். இவர்தான் தன் தேவைகள் மற்றும் வேலைகள் எல்லாம் பார்க்க வேண்டும்.
  • இந்த நேரத்தில் அப்பா முழுவதுமாக கள்ளிகுளத்தில் தங்கி விட்டார்கள். ஒரு நிலம் வாங்கி வீடும் கட்ட ஆரம்பித்தார்கள்.

திருமண வாழ்க்கை மற்றும் குழந்தைகள்:
  • சில பெரியவர்கள் உதவியுடன் 1982 செப்டம்பர் 15 ல் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகிலுள்ள போத்தக்காலன்விளை திரு. எஸ்.எம்.எம். மாணிக்கம் (பழைய கி.மு. கிராம முனிசிபல் என்றால் எல்லோர்க்கும் தெரியும்) கிரேசம்மாள் டீச்சர் அவர்களின் மகள் ஜூலியட் என்ற என் அம்மாவிற்கும் திருமணம் முடிந்தது...
  • நான் [ஸ்நாபக் வினோத்] பிறக்கவும், வீடு கட்டி முடிக்கவும் சரியாக இருந்தது. அது முதல் நாங்கள் இதே வீட்டில்தான் உள்ளோம். இரண்டு வருடத்தில் தங்கை ஸ்நாபக் வித்யாவும் பிறந்தாள். [ஸ்நாபக் பெயர் காரணத்தை அப்புறமாக விளக்குகிறேன்]
  • அதன் பிறகுதான் அம்மாவிற்கு டீச்சர் வேலை கிடைத்தது. கொஞ்சம் கஷ்ட படுவோம் காலையில், எல்லோரம் ஒரே நேரத்தில் பள்ளிக்கு கிளம்புவதர்க்கு.
  • நாங்கள் வளர வளர அவ்வப்போது அம்மாவையும் அப்பாவையும் ஏதாவது ஒரு ஊர்க்கு வேறு பள்ளிக்கு மாற்றிவிடுவார்கள்.
  • அப்பாவும் அம்மாவும் ரொம்பநாட்கள் மன்னார்புரத்தில் உள்ள தூய மரியன்னை பள்ளியில் வேலை பார்த்தார்கள். நாங்கள் எங்கு நடக்கும் அனைத்து விழா, நிகழ்வுக்கும் செல்வோம். எங்களுக்கு அங்கு நிறைய நண்பர்கள், நட்பான குடும்பங்கள். எல்லோரும் ரொம்ப பாசமாக இருப்பார்கள்; இன்றும் தொடர்கிறது எங்கள் நட்பும், உறவும்.
  • மீண்டும் அம்மா கள்ளிகுளம் புனித அலாய்சியுஸ் நடுநிலைப் பள்ளியிலும், அப்பா மூலைக்காடு புனித இராயப்பர் நடுநிலைப் பள்ளியிலும் மாற்றலாகி ரொம்பநாளாய் வேலை பார்க்கிறார்கள.

பணி உயர்வு, பணி மாற்றம் மற்றும் பல மாற்றங்கள்:
  • அப்பாவிற்கு தலைமை ஆசிரியர் பணி உயர்வு வரும் நேரத்தில் அருட்தந்தை (கத்தோலிக்க திருச்சபை பள்ளிகளின் பொறுப்பாளர் அந்த ஊர் பங்கு அருட்தந்தை தான்) தன் சுய நோக்கத்திற்காக அவரை பிரச்சனை செய்து வேறு ஊர்க்கு [வடக்கன்குளம் பக்கத்தில் பத்திநாதபுரம்] மாற்றி தலைமை ஆசிரியர் பணி உயர்வு கொடுக்கிறார். தினமும் 15, 15 மொத்தம் 30 கி.மீ. தூர பயணம். மிகவும் கஷ்டப்பட்டார்கள்.
  • அப்போது நான் கல்லூரி படிப்பிற்காக சென்னை சென்றேன். சென்னையில் ஸ்ரீ சிவ சுப்பிரமானிய நாடார் (S.S.N) பொறியியல் கல்லூரியில் என்னுடைய தகவல் தொழில் நுட்ப [B.Tech in IT] படிப்பு. நான்கு வருடமும் கல்லூரி விடுதியில் தான்.
  • தங்கச்சி பள்ளி படிப்பு முடிந்ததும் அருகிலுள்ள கல்லுரியில் இளங்கலை தகவல் தொழில் நுட்ப படிப்பில் [B.Sc in IT] சேர்ந்தாள். வீட்டிலிருந்தே சென்று வருவாள்.
  • பக்கத்தில் பெரிய ஊரான வள்ளியூரில் வீடு கட்டி அங்கு சென்று கொஞ்ச நாள் இருந்தோம். அங்கு அவ்வளவாக அம்மாவிற்கும் அப்பாவிற்கும் பிடிக்காததால் அதை வாடகைக்கு கொடுத்து விட்டு மீண்டும் கள்ளிகுளம் வீட்டிற்கு வந்து விட்டோம்.
  • அப்பாவிற்கு மீண்டும் மாற்றம். இப்போது வேலை பார்க்கும் இலங்குளம் R.C. தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி மாற்றம் பெற்றார்கள்.
  • எனக்கு படிப்பு முடிந்ததும் சென்னையில் வேலை கிடைத்தது. ஹச்.சி.எல். தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் இளம் பொறியாளர் வேலை.
  • தங்கை படிப்பு முடிந்து தான் விரும்பிய அதே கல்லூரி மூத்த மாணவருடன் காதல் திருமணம் செய்து கொண்டாள். அப்பா அம்மா விற்கு ரொம்ப வருத்தம். அப்பாவிற்கு தங்கச்சி என்றால் மிகவும் பாசம். ஒருவழியாக இன்று அனைத்தும் சரியாகி விட்டது.
  • அப்பாதான் அவளை B.Ed. படிக்க வைத்தார்கள். முதலில் தங்கச்சியும் கணவரும் யாருடைய தயவும் இல்லாமல் கொஞ்சம் கஷ்டப்பட்டார்கள். இப்போழுது நன்றாக இருக்கிறார்கள்.

அப்பாவின் சேவைப் பணி:
  • அப்பா சிறுவயது முதலே உறவினர்களுக்கும், உதவி என வருபவர்களுக்கும் மனம் விரும்பி முடிந்தவரை உதவுவார்கள். பல திருமணங்களை நடத்தி வைத்துள்ளார்கள். அவர்கள் தேவையை கஷ்டம் பார்க்காமல் கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு மகிழ்ச்சியே பிறர்க்கு உதவுவதுதான்.
  • இந்தமாதிரி சூழ்நிலையில், குருத்துவ படிப்பில் அவருடைய நண்பரான அருட்தந்தை. ஜேம்ஸ் பீட்டர் அவர்களின் வழிகாட்டலில், எங்கள் ஊர் கள்ளிகுளத்தில் 12 நண்பர்களுடன் இணைந்து 12 அப்போஸ்தலர்களாக, பராமரிப்பின்றி இருக்கும் முதியர்வர்களுக்கு உதவ கிறிஸ்துவின் சேனை எனும் சபையை (குழு) ஆரம்பித்தார்கள்.
  • சபையில் இருக்கும் அனைவரும் சிறுது பணம் போட்டு, பிற நல்ல உள்ளங்களிடம் பணம் வாங்கி சேர்த்து, அந்த பகுதியில் பராமரிப்பில்லாமல் இருக்கும் வயதானவர்களுக்கு அவர்களின் ஒரு மாத சாப்பாட்டு தேவைக்கு மளிகைப் பொருளை அவர் உறவினர்களிடம் வாங்கி கொடுப்பார்கள்.
  • இந்த சபை அப்போஸ்தலர்கள் அடிக்கடி அவர்களை சென்று கண்காணித்தும் அவர்களுக்காக செபம் செய்தும் வருவார்கள்.
  • சபை உறுப்பினர்கள் அனைவரும் அவ்வப்போது குடும்பத்தோடு பக்கத்து ஊர்களில் உள்ள கருணை இல்லங்களுக்கும், கோயில்களுக்கும், இறை சுற்றுலா பயணத்திற்கும் செல்வது வழக்கம். நானும் சில நேரத்தில் அவர்களுடன் தூத்துக்குடி, வேளாங்கண்ணி, பூண்டி யிலுள்ள கோவில்களுக்கு சென்றுள்ளேன். உண்மையிலேயே ஒரு அர்த்தமுள்ள பணியாக இருக்கிறது.
  • நான் சென்னை ஹச்.சி.எல்.லில் ஐந்தரை ஆண்டுகள் பணி செய்து விட்டு மதுரை ஹனிவேல் மென்பொருள் நிறுவனத்தில் டெக்னிகல் லீடர் ஆக வேலைக்கு சேர்ந்தேன். அப்பா அம்மாவிற்கும் பக்கமாக வந்ததில் மகிழ்ச்சி.

ஓய்வுக்கான தருணம், நமக்கான பாடம்:
  • 35 வருட ஆசிர்யர் பணி, அதனை சார்ந்தே பொதுச்சேவை பணி, ஆசிர்வாதம் சார் என்றே அழைக்கப்படுகிறார்கள். [என்றும் அழைக்கப்படப்போகிறார்கள்] ஓய்வு என்றதும் அப்பாவிர்க்கு கொஞ்சம் வருத்தமே.
  • நிரந்தர ஆசிரியர் பணியிளிருந்துதான் ஓய்வு, அவருடைய நிரந்தரமான மனிதாபிமான சேவை பணியிலிருந்தல்ல...
  • இன்றும் அவருடைய பழைய மாணவர்கள் வந்து மரியாதை நிமித்தமாக பேசுவதும், நன்றி சொல்வதும் எனக்கு புல்லரிப்பை ஏற்படுத்தும். நிறைய மாணவர்கள் இன்று ஊரிலும் வெளியூரிலும் பெரிய, சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் உள்ளார்கள். அப்பா எனக்கு தெரிந்து எந்த உதவிக்கும் யாரையும் பார்த்ததில்லை.
  • நான் படித்த, எனக்கு அவர் கற்பித்த, எல்லோருக்குமான அவருடைய வாழ்க்கை பாடம் என்னவென்றால் திறமையை வளர்த்தல், உயர்ந்த கல்வி, நல்ஒழுக்கம், பணிவு, தாழ்ச்சி, அன்பு, பாசம், உதவும் குணம், பொறுமை, நீதி, நேர்மை, கடமை, நாணயம், உறுதி, ஊக்கம், நம்பிக்கை, நல்ல மனிதர்களுடன் நட்பு, போராட்டமான நேரத்திலும் அமைதி, சமாதானம், சந்தோசம், எத்தகைய மகிழ்ச்சியிலும் மிகவும் துள்ளாமல் தாங்க முடியாத துக்கம் வரும் போதும் ஏற்றுக்கொள்ளும் சமநிலை மனது, இவை எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாய், இவை எல்லாவற்றிர்க்கும் மேலாய் கடவுள் மேல் அளவு கடந்த விசுவாசம்...
அப்பாவைப் பற்றி நினைத்ததும் உடனே என் நினைவுக்கு வரும் இரண்டு கூற்று...
பைபிள்:
உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறரிடத்திலும் அன்புகூருவாயாக இயேசுக் கிறிஸ்து (மத்தேயு 22:39)

குறள்:
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
[விளக்கம்: அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்]
தொடர்ந்து அவர்கள் உடல், உள்ள, ஆன்ம நலனுக்காக ஜெபிக்கும், விரும்பும் நன்றியுள்ள மாணவன், பாசமுள்ள மைந்தன் நான்... நண்பர்களையும் அவருடைய மாணவர்களையும் தொடர்ந்து அவருக்காக ஜெபம் செய்யவும், ஊர்க்கு வரும்போதெல்லாம் அவரை சந்திக்கவும், மேலும் மேலும் வளர்ந்து அறவழியில் நன்றியோடு வாழவும் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

வியாழன், அக்டோபர் 07, 2010

பஞ்சபூதங்கள், மனிதன், நாம்!!!

[பஞ்சபூதங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்ததில் கிடைத்த குறள் மற்றும் என் சிந்தனைகள்]

குறள் 271
அறத்துப்பால்/Virtue/Araththuppaal
அதிகாரம்/Chapter/Adhigaram 28

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்

விளக்கம்
ஒழுக்க சீலரைப் போல உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்து அவரது உடலில் கலந்துள்ள நிலம், நீர், தீ, காற்று, வெளி எனப்படும் பஞ்சபூதங்களும் தமக்குள் சிரித்துக் கொள்ளும்

Couplet 271
Who with deceitful mind in false way walks of covert sin,
The five-fold elements his frame compose, decide within

Explanation
The five elements (of his body) will laugh within him at the feigned conduct of the deceitful minded man

Transliteration
Vanja Manaththaan Patitrozhukkam பூதங்கள்
Aindhum Akaththe Nakum
[உதவி: நண்பனின் இணையதலதிளிருந்து
http://www.gokulnath.com/thirukurals]

அன்பெனும் நதியில்(நீரில்) குளித்து,
நம்பிக்கை, மன்னிப்பு பண்பெனும் நிலத்தில் ஊன்றி,
அமைதி, சமாதானம், தாழ்ச்சி, இரக்கம் எனும் காற்றினில் கரைந்து,
அறிவு, ஞானம் பெற்று, இறப்பெனும் நெருப்பில் எவ்வேளையும் வீழ இருக்கும்..,
இழிநிலை பிறப்பை வென்று, உயர்நிலை ஆகாயத்தை அடைய முனையும் கடைநிலை மனிதன்... ... ... (நாம்)!