திருவள்ளுவர் என்னும் நண்பர்
சுந்தர ராமசாமி
[see also Thirukural of Thiruvalluvar
http://www.tamilnation.org/literature/kural/index.htm]
1 February 2000
Courtesy - Forum Hub: இக்கட்டுரையை நம் 'போரம் ஹப்' நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதியளித்த திரு. சுந்தர ராமசாமி அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள். 'போரம் ஹப்'புக்கேற்பக் கட்டுரையை வடிவமைப்பு செய்து உதவிய 'காலச்சுவடு' ஆசிரியர் திரு, கண்ணனுக்கு மனமார்ந்த நன்றி. -- காஞ்சனா தாமோதரன்.
திருக்குறளுடன் நாம் எந்தவிதமான உறவு வைத்துக்கொள்ள வேண்டும்? நாம் விரும்பும் வகையில் உறவுகொள்ள நமக்கு முழுச் சுதந்திரம் இருக்கிறது. இந்த உறவின் தன்மையை வகுத்துக்கொள்ள வேண்டியது நாம்தாம்.
திருவள்ளுவரை மேடைப் பேச்சில் வியந்து பாராட்டலாம். அவருடைய பேரறிவைக் குறட்பாக்களை அள்ளி வீசி நிரூபிக்கலாம். ஒரு குறளுக்கு ஒன்பது விளக்கங்களைச் சொல்லிச் சபையோரை வியப்பில் ஆழ்த்தலாம். குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பை "எடுத்துவிட்டுப்" பேச்சாளர் தன் ஆங்கில ஞானத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டலாம்.
வள்ளுவருக்கு இணையான மேதை இன்று இல்லை என்றும் முன்னர் இருந்ததில்லை என்றும் நாளை தோன்றப் போவதில்லை என்றும் சூளுரைக்கலாம். திருவள்ளுவருக்குப் பெருமை சேர்கிறதோ இல்லையோ பேச்சாளரின் வாய் வீச்சு தொடரும்போது அவர் மெத்தப் படித்த மேதாவி என்பதைச் சபை ஏற்றுக்கொள்ளும்படி ஆகிவிடும்.
மேடைப் பேச்சாளர் தன் புலமைக் கொடியை நிலைநாட்டத் திருக்குறளைச் சற்று விரிவாகக் கற்றிருக்க வேண்டும் என்ற அவசியம்கூட இல்லை. ஆங்காங்கே வாகாகச் சில குறள்களைப் பொறுக்கி நெட்டுரு செய்திருந்தாலே போதுமானது.
பல்வேறு சந்தர்ப்பங்களுக்கும் பொருந்தி வருவதுபோல் அக்குறள்களின் தேர்வு அமைந்திருந்தால் சொற்பொழிவாளர் கெட்டிக்காரர்தான். அரசியல் மேடைகளில் எந்தெந்த குறள்கள் ஜொலிக்கும் என்பது அவருக்குத் தெரியாமலா இருக்கும். கைவசம் இருக்கும் குறளுக்குத் தோதாகப் பேச்சின் தலைப்பு அமையவில்லை என்றால் அதை இழுத்து மடக்கிக் கைவசப்படுத்திக் கொள்வதும் மேடைப் பேச்சுக்குரிய சாமர்த்தியங்களில் ஒன்றுதான். சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்ல ஆரம்பத்தில் சிறிது கூச்சமாகவே இருக்கும். கூச்சம் மனித ஜன்மங்களுடன் இணைந்து வந்துகொண்டிருக்கும் ஒரு பழைய வியாதி. ஆனால் கைதட்டல் தரும் பரவசம் அக்கூச்சத்தை இருந்த இடம் தெரியாமல் அடித்துவிடும்.
திருக்குறள் சார்ந்த புலமையை மெய்யாகவே தேடிச் செல்வது மற்றொரு வகையினரின் இயல்பு. இவர்களின் நோக்கம் சமுதாய நலன் சார்ந்தது. வள்ளுவரின் கருத்துகளைச் சமுதாயத்தில் பரப்பினால் மக்கள் மேல்நிலையை அடைந்துவிடுவார்கள் என்பது இவர்கள் நம்பிக்கை. தமிழ் வாசகர்கள், படைப்பாளிகள், படிப்பாளிகள் ஆகியோரின்
ஏகோபித்த பாராட்டைப் பெற்று வருகிறவர்கள் இவர்கள். திருக்குறளைத் தமிழ்ச் சமூகத்தில் பரப்பும் தொண்டைத் தலைப் பொறுப்பாக வைத்துக் கொண்டிருக்கும் இவர்களுடைய செயலபாடுகள் பொதுவாக இரண்டு தளங்களில் நிகழ்கின்றன. எழுத்து வடிவத்திலும், பேச்சு வடிவத்திலும். மேடைப் பேச்சாளர்கள் நூலாசிரியராகவும், நூலாசிரியர்கள் மேடைப் பேச்சாளராகவும் இயங்குவது இயற்கை.இரண்டு ஆற்றல்களையும் சரிசமமாகக் கொண்ட இரட்டைத் துப்பாக்கிகளும் நம்மிடையே உண்டு.
திருக்குறளைச் சமுதாயத்தில் பரப்ப விரும்புகிறவர்களின் ஆவேசங்கள் கட்டுக் கடங்காதவை. இவர்களை நாம் அவ்வப்போது சந்திக்கிறேன். தமிழ்ச் சமுதாயத்தில் ஒவ்வொருவரும் - ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்ற வேறுபாடு இன்றி - குறளை முழுமையாக மனப்பாடம் செய்ய வேண்டும், திருக்குறளைக் கட்டாயப் பாடமாக்கினால்கூடத் தவறில்லை என்றார் ஒரு நண்பர். திருக்குறளை முழுமையாகக் கற்றவர்களையே தமிழ் அறிஞர்கள் என ஒப்புக்கொள்வேன் என்றார் மற்றொருவர். திருக்குறளை முழுமையாகக் கற்றறியாதவர்களின் டாக்டர் பட்டங்களைத் தான் மதிப்பதில்லை என்றும் சேர்த்துக்கொண்டார்.
தமிழர்களுக்கு வேதம், குரான், பைபிள், பகவத் கீதை, தம்மபதம் எல்லாம் குறள்தான் என்றார். இவர்களுடைய ஆவேசங்கள் மீது எனக்கு மதிப்பு உண்டு. 1330 குறள்களையும் ஒவ்வொரு தமிழனுக்கும் ஒப்பிக்கத் தெரிந்து விட்டால் தமிழ்ச் சமூகம் மேல்நிலையை அடைந்துவிடுமா என்று நான் என் ஆவேச நண்பரிடம் கேட்டேன். உறுதி, உறுதி, உறுதி என்று மூன்று முறை சொன்னார்.
நமக்குத் தேவை மனப்பாடத் தகுதியா அல்லது முற்றாக நம்பி ஏற்கும் குறள்களின் கருத்துகளையேனும் வாழ்வில் புகுத்தி அவற்றின் வலிமையை நடைமுறையில் உணர்ந்துகொள்வதா என்று கேட்டேன். இந்த உணர்வு வலுவடையும்போதுதானே திருவள்ளுவர் மீது அதிக நம்பிக்கை கொள்வோம் என்றும் சொன்னேன்.
குறள் வாழ்வுக்கு வழிகாட்டும் ஒரு நூல். இன்றும் நம்மைச் செம்மைப் படுத்திக்கொள்ளவும் செழுமைப்படுத்திக்கொள்ளவும் அந்நூல் உதவும் என்று நம்பத் தொடங்கும்போதுதான் குறளுக்கும் நமக்குமான உறவு துளிர்க்கத் தொடங்குகிறது. வாழ்வுக்கு வழிகாட்டும் நு‘லை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும்? மேடைப் பேச்சுக்கு உபயோகப்படும் கருவியாகவா? நினைவாற்றலை வளர்க்க ஒரு பயிற்சியாகவா? புலமைப் பிரகடனத்திற்கான முகாந்தரமாகவா?
நாம் வாழ்வின் தளத்தில் ஏழ்மைப்பட்டு நிற்கிறோம். பொருள் சார்ந்த ஏழ்மையும் கலாச்சாரம் சார்ந்த ஏழ்மையும் இக்காலத்தில் நம்மை வாட்டுகின்றன. பொது வாழ்க்கையில் ஒழுக்கம் என்பது காலாவதியாகி விட்டது. பண உறவுகள் வாழ்க்கைக்கு அடிப்படையான சகல உறவு களையும் கபளீகரம் செய்துகொண்டிருக்கின்றன. மனித நேயம் என்ற சொல்தான் எழுத்திலும் பேச்சிலும் அதிகம் அடிபடும் சொல். வாழ்க் கையில் அருகிப் போயிருப்பதும் இந்த மனிதநேயம்தான்.
உலகியல் சார்ந்து கால்களை மண்ணில் ஊன்றி நிற்க வேண்டும் என்று ஆசைப் படுகிறோம். இந்த உலகத்துக்குரிய இன்பங்களைத் துறக்காமல், பொறிகளை ஒடுக்காமல், மற்றொரு உலகத்தை எண்ணி ஏங்காமல், மனைவி, குழந்தைகளுடன் வாழ விரும்புகிறோம்.இந்த நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள சில அடிப்படை நியதிகளை இளமையிலேயே நாம் தெரிந்துகொண்டுவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு செயலுக்குத் துணையாக நிற்பது மற்றொரு சந்தர்ப்பத்தில் பொய்த்துப் போய்விடுகிறது. நிரந்தரமான நியதிகள் என்று எதுவுமே கிடையாதா? இருந்தால் அவற்றைத் தொகுத்துக்கொள்வது வாழ்க்கைக்கே ஊன்றுகோல் போல அமையுமே.
இவ்வாறான தேடல் உருவாகும் மனங்களுக்குத்தான் பொது நெறிகளை வற்புறுத்தும் பேரிலக்கியம் தேவையாக இருக்கிறது. நாம் உலகியலில் பற்றுகொண்டிருப்பதால் திருவள்ளுவரின் உறவு மிக இணக்கமாக அமைந்துவிடுகிறது. ஒரு ஊரின் வரைபடம்
ஒன்று நம் கைவசம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அது சரியான வரைபடம்தானா? அந்த வரைபடம் சார்ந்து பயணத்தை மேற் கொள்ளும்போது அது சுட்டும் இடங்களுக்கு நாம் போய்ச் சேர்ந்தால் அந்த வரைபடம் சரியானதுதான்.
சில நோய்களுக்குச் சுயமாகச் சிகிச்சை செய்துகொள்ள வழிவகைகள் கூறும் நு‘ல்கள் இருக்கின்றன. அவற்றின் உதவியால் நோய்களைக் குணப்படுத்திக்கொள்ளும்போது அந்த நு‘ல் களின் மீது நம்பிக்கை கொள்கிறோம்.
வாழ்க்கையின் அடிப்படையையே கற்றுத் தர முற்பட்ட நு‘ல் வள்ளுவம். அது தமிழ் வாழ்வுக்குரிய நெறியை வகுத்திருக்கிறது. மதிப்பீடுகளை மொழிக்குள் துல்லியப்படுத்தித் தருகிறது. திருவள்ளுவர் 2000 வயதான இளைஞர்.
இன்றும் அவர் உயிர்ப்புடனே இருக்கிறார்.அந்த உயிர்ப்பை நமக்கு உணர வைப்பது அவருடைய மொழி ஆற்றலும் சிந்தனையின் கூர்மையும். அதில் பழமையின் பாசி இன்னும் படியவில்லை.
வாழ்க்கையைச் செம்மைப்படுத்திக்கொள்ளத் திருக்குறளைப் பயன்படுத்தும் போதுதான் அந்தப் பெருநு‘லுக்குரிய மதிப்பை உண்மையாகவே அதற்கு அளிக்கிறோம். 1330 குறள்களையும் நாம் மனப்பாடமாகக் கற்றுவிடலாம். குறுகிய நேரத்தை ஒதுக்கி ஓராண்டில் முடித்துவிடலாம். ஆனால் அந்த மனப்பாடத் தகுதி நம் வாழ்க்கையில் கடுகளவு மாற்றத்தைக்கூட உருவாக்காது. குறளைக் கற்று அதன் பொருளை நாம் நுட்பமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
புரிந்துகொள்ளப் பல உரைகள் இருக்கின்ன. அந்த உரைகள் நமக்கு உபயோகமானவை தான். ஆனால் குறளுக்கு நாம் அளிக்கும் பொருள் உரைகள் சார்ந்து நிற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உரையாசிரியர்களுக்குள் கருத்து வேற்றுமைகள் இருக்கின்றன. உரைகளை ஏற்க வேண்டும் என்ற நிலை இருந்தாலும்கூட எந்த உரையைத் தேர்ந்தெடுப்பது என்ற முடிவை நாம்தாம் எடுக்க வேண்டியிருக்கிறது.
நாம் நமக்குச் சொந்தமான உரைகளை விவேகத்துடன் உருவாக்கிக்கொள்ள முடியும். உரைகளின் உதவியுடன் நாம் உருவாக்கும் அர்த்தங்கள் மூலப் பாடத்துக்கு முரண்பட்டு நிற்கக்கூடாது. இதன் பொருள் திருவள்ளுவர் ஒன்று சொல்ல நாம் அதை மற்றொன்றாகப் புரிந்துகொள்ளக்கூடாது என்பதுதான்.
திருவள்ளுவரை நாம் நண்பராகத்தான் பாவிக்க வேண்டும். இதற்குமுன் எந்த நூற்றாண்டிலும் இல்லாத இளமையை அவர் சென்ற நூற்றாண்டில் - இப்போது நாம் தாண்டி வந்திருக்கும் நூற்றாண்டில் - பெற்றிருக்கிறார்.
அவர் மிகப் பெரிய பெருமையை அடைந்தததும் சென்ற நூற்றாண்டில்தான். எந்த அறிவையும் புனிதப்படுத்தினால் அது அந்நியப்பட்டுப் போய்விடும். நடைமுறையிலிருந்து பின்னகர்ந்து சடங்குக்குள் சென்று விழும். சடங்கும் சம்பிரதாயமும் தோன்றிவிட்டால் பூசாரிகள் தோன்றிவிடுவார்கள்.
திருக்குறள் மக்களுக்கான நூல். அது நிரந்தரமான உண்மைகளைக் கூறுகிறது என்றாலும்கூடக் காலத்துக்கு காலம் அவற்றில் சில குறள்கள் அழுத்தம் கொள்கின்றன. கால மாற்றத்தில் முன்னகர்ந்திருப்பவை பின்னகர்ந்தும் பின்னகர்ந்தவை முன்னகர்ந்தும் வரக்கூடும். காலத்தை வென்று நிற்கும் செவ்விலக்கியங்களின் குணம் இது.
இன்றைய காலத்துக்கு ஏற்ப பகுத்தறிவுப் பார்வையும் சமத்துவம், சம நீதி சார்ந்த பார்வையும் திருக்குறள் மீது ஏறுகின்றன. அந்நிலை இயற்கையானது தான். பொது ஒழுக்கம் žரழிந்து இவ்வொழுக்கத்தை மீண்டும் வென்றெடுக்க வேண்டும் என்ற உணர்வு தலைதூக்குகிறபோது திருவள்ளுவரின் ஒழுக்கம் சார்ந்த கருத்துகள் மேலோங்கும்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் அரசியல்வாதிகள் "கள்ளுண்ணாமை" என்ற அதிகாரத்தை மேடையில் பல குறள்களைச் சுய நம்பிக்கையுடன் சொல்லியிருக்கிறார்கள். இன்றைய அரசியல்வாதிகளால் அப்படிக் கூற முடியும் என்று
தோன்றவில்லை. தமிழகமே ஒரு பெரிய கள்ளுக்கடையாக மாறுகிறபோது - அந்த நாட்கள் வெகு தொலைவில் இல்லை - "கள்ளுண்ணாமை" மீண்டும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கலாம்.
இப்படித்தான் பேரிலக்கியங்கள் தங்கள் முகங்களை மாறி மாறி ஒளிரச் செய்து காலத்தைத் தாண்டி வருகின்றன. திருக்குறளைப் பின்பற்றித் தம் வாழ்க்கையைச் செம்மைப்படுத்திக்கொண்டவர்கள் அது பற்றிப் பேசலாம்.
திரு.வி.க.வும் மு.வ.வும் அவர்களைப் போல் எண்ணற்ற தமிழர்களும் திருக்குறள் நெறிகளைக் கடைப்பிடித்துத் தம் வாழ்வைச் செம்மைப்படுத்திக் கொண்டவர்கள். அவர்களைப் போன்றவர்கள் அறிவார்கள் திருக்குறளின் வலிமையை. அவர்களைப் போன்றவர்களால்தான் திருக்குறள் மீது ஆழ்ந்த நம்பிக்கையை மக்களிடையே உருவாக்கவும் முடியும்.
திருக்குறளை முழங்கும் பிரச்சாரப் பீரங்கிகளிடம் "நீங்கள் குறள் நெறிக்கு ஏற்ப வாழ்ந்து வருகிறீர்களா?" அல்லது அவ்வாறு வாழவேனும் முயற்சிக்கிறீர்களா? என்று கேட்க மக்களுக்கு உரிமை உண்டு.
அவ்வாறு கேட்பவர்கள்தான் திருவள்ளுவரின் நண்பர்கள்.