செவ்வாய், செப்டம்பர் 21, 2010

மதங்களை கடந்த ஆன்மிகம்! (பாகம் 1)

செப்டெம்பர் 17, 18, 19 தேதிகளில் சபரி மலைக்கு என்னுடைய project team யுடன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது... மிகவும் சிறந்த அனுபவமாக இருந்தது... அதைப் பற்றிய பதிவு...

தயாரிப்பு
சபரிமலை நோக்கிய பயணம்
சபரிமலையில் நிகழ்வுகள்
ஊர்க்கு திரும்புகையில்

தயாரிப்பு
கிறிஸ்துவனாகிய நான், சபரிமலைக்கு செல்ல தூண்டியது இரண்டு விடயங்கள்... முதலாவது பல இந்து நண்பர்கள் மிக ஆர்வமாக சபரிமலை செல்ல தூண்டப்படுவத்தின் ஈர்ப்பு என்ன என்ற ஆர்வம் (என்னுடைய மேனேஜர் மிக மிக ஆர்வம் உடையவர், மாதந்தோரம் முதல் ஐந்து நாள்கள் நடை திறக்கையில் இரண்டு நாள்கள் தவறாமல் சில ஆண்டுகளாக சென்று வருகிறார். அதைப்பற்றி அவர் பேசாத நாட்கள் கிடையாது எனலாம்), இரண்டாவது அதற்காக அவர்களை அவர்கள் தயாரிக்கும் விதம்... (நாற்பது நாட்கள் விரதம், மாலை அணிவார்கள், சுய சுத்தம், காலை மாலை பச்சை தண்ணீர் குளியல், தினமும் ஆலயத்தில் பூஜை, இது போக கெட்டப்பழக்கங்கள் இருந்தால் விட்டு விட வேண்டும், தீய வார்த்தைகள் பேசக்கூடாது, தீய எண்ணங்களை கைவிட வேண்டும், பிற பக்தர்களையும் மனிதர்களையும் சாமி என்றழைத்து யாவருடனும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்... பலருக்கு இவற்றையெல்லாம் கடைப்பிடிப்பது மிக கடின விடயம்... அதிலும் குறிப்பாக கார்த்திகை, மார்கழி மாதங்களில் இதை கடை பிடிப்பது மிக மிக கடினம், அந்த இரு மாதங்கள் தான் சபரிமலை season என அழைக்கப்படுகிறது)

இந்த பயணத்திற்காக நாங்கள் எங்களை மிகவும் தயாரிக்கவில்லை. ஒரு வாரம் மட்டுமே தயாரிப்பு. குறிப்பாக நான் மாலை கூட அணியவில்லை. என்னுடைய ஆர்வத்தினால் கட்டுப்பாடுகளை சிறிது தளர்த்தி அவர்களுடன் இந்த தெய்வீக பயணத்தில் இணைத்து கொண்டார்கள்...

சபரிமலை நோக்கிய பயணம்
செப்டம்பர் 17 வெள்ளிக் கிழமை, மதியம் 2.30 மணிக்கு பயணம் மதுரையில் இருந்து சபரிமலை நோக்கி ஆரம்பமானது... மொத்தம் 7 சாமிகள், 2 வாகனம்... மதிய உணவும் இரவு உணவும் இரு நண்பர்கள், வீட்டில் தயார் செய்து கொண்டுவந்திருந்தார்கள்...

உசிலம்பட்டி முன்பு இரயில்வே கேட் அருகே மரததடியில் மதிய உணவு சாப்பிட்டோம். உணவினை அங்குள்ள ஏழை மக்களிடம் பகிர்ந்துகொண்டோம். எலுமிச்சை சாதம், சட்னி, தயிர் சாதம்... சாப்பாடு மிகவும் அருமையாக தயார் செய்து இருந்தார்கள்.

அருமையான மலைவழி பயணம், அதுவும் வண்டி ஒட்டாமல் பின்னிருக்கையில் உட்கார்ந்து இயற்கையை ரசித்தும் வெட்டி கதைகளையிட்டும் செல்வது எப்படி இருந்தது என்றால்... சொர்க்கத்திற்கு செல்கையில் கடவுள் இடம் அதைப்பற்றி வினவுவது போல்... இனிமையான பொழுதுகள்... மிகவும் மகிழ்ச்சியோடு பயணித்தேன்...

பிற்பாதி பயணத்தில் சில புதிய விடயங்களை பத்தி விவாதிக்க முனைந்தது. மனிதனுடைய ஆத்மா (soul) பற்றிய ஒரு உரையாடல் அது... Dr. Newton என்பவர் 'past life regression' பற்றிய ஆராய்ச்சியில் இறப்பிற்குப்பின் நிகழும் விடயங்களை, அதாவது உடலில் இருந்து ஆத்மா எப்படி பயணிக்கிறது, ஆத்மாக்களின் வகைகள் என்ன, மறுபிறவி என பல ஆயிரம் மக்களிடம் மனோதத்துவ ரீதியில் ஆராய்ச்சி செய்திருக்கிறார். அதைப்பற்றி நுணுக்கமாக விவாதித்தோம். (மேலும் விடயம் அறிய இந்த வலைக்கு செல்லவும் http://www.near-death.com/newton.html. ) ஒவ்வொரு மதத்திலும் ஆத்மா பற்றி எப்படி நோக்குகிறார்கள், சொர்கத்திற்கும் நரகத்திற்கும் ஆத்மாவின் தொடர்பு என்ன, குழந்தைகளுக்கு வரும் கனவுகள் என நீண்டது இந்த உரையாடல்...

சரியாக 9.30 மணிக்கு சபரிமலை அடிவாரம் பம்பை நதியை அடைந்தோம்... அங்கு நண்பர் கிருஷ்ணன் காத்துக்கொண்டு இருந்தார். மின் அலுவலகத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு இரவு உணவை முடித்தோம்... சப்பாத்தியும் தக்காளி தொக்கும், என்ன ருசி...

இரவு மணி 10.30, பம்பையில் நீராடிவிட்டு மலையில் நடக்க ஆரம்பித்தோம்... மலையிலுள்ள கோவிலுக்கு மொத்தம் 7 கிமீ. முற்றிலும் மலைப்பாதை. ஆரம்பத்தில் ஏதோ எளிதாக இருப்பது போல் தோன்றியது. பின்னர் செங்குத்தாக ஏற வேண்டி இருந்தது. நான் சிறிது தூரத்திலேயே மிகவும் களைப்பு ஆனேன். நண்பர்கள் தைரியம் குடுத்தார்கள், சுமையை பகிர்ந்து கொண்டார்கள். சிறுது எளிதானது பயணம்... அதன் பிறகு கொஞ்சம் கதை பேசிக்கொண்டு நடையை கட்டினோம்... ஒரு இடத்தில் Lime Soda கிடைத்தது... உடலுக்கு கொஞ்சம் புத்துணர்ச்சி கிடைத்த மகிழ்ச்சி...

மலையை அடைந்தோம்... சந்தோசமாக இருந்தது மனதிற்கு... போனதும் தயார் நிலையில் இருந்த அறையில் 7 பேரும் ஓய்வெடுத்தோம்...

சபரிமலையில் நிகழ்வுகள்
காலையிலேயே எழுந்து குளித்து சாமி பார்க்க தயாரானோம்... அச்டாபிஷேகம், சிறப்பு தரிசனம், சாப்பாடு, ஓய்வு, சாப்பாடு, கதைகள், அரட்டைகள், விளையாட்டு செய்திகள், சச்சின் டெண்டுல்கர், கடவுளர் கதைகள், மதங்கள், ஆன்மிகம் என சிலபல உரையாடல்... பொழுது இனிதே கழிந்து கொண்டிருந்தது...

மேலும் விரிவாக தொடர்வேன்...

படங்கள் இந்த வலை இணைப்பில் உள்ளது... பயனடையுங்கள் நண்பர்களே :). http://picasaweb.google.co.in/snabakvinod/SabarimalaSep17To19?authkey=Gv1sRgCKres9fCo8iEDw#

படித்த நண்பர்கள் comment கொடுக்கலாமே...

வியாழன், செப்டம்பர் 09, 2010

இன்று புதிதாய் பிறந்தேன்

இவ்வுலகில் இன்றையச் சூழலில் நிறம் மாறும் மனிதர்களிடையில் வாழ்வது மிக கடினம்... அதனினும் கடினம் அப்படிப் பட்ட மனிதர்களிடமிருந்து சூழ்ச்சி எனும் அவர்கள் முடிச்சை அவிழ்த்து வெளியில் வருவது...

மிகவும் பிடித்த நண்பர்களிடமே ரொம்ப நேரம் இருப்பது சிலருக்கு சலிப்பு தட்டும் இந்த அதிவேக உலகில், புதிதாய் கிடைத்த நண்பனை(?) ஏற்று நடப்பது சிறிது சிரமமே... அந்த சிரமத்தையும் மீறி நட்புணர, "விட்டு கொடுக்கும் மனநிலை" மிகவும் அவசியம் இருவருக்கும்... அதில் ஒருவர் பின்தங்கினாலும் படகு சுமுகமாக பயணிக்காது... சரி, விட்டு கொடுப்பினும் பிரியலாம் என்ற எண்ணம் ஒருவருக்கு வந்தாலும் ஒருவருக்கொருவர் எதிரியாய் பாராமல் பிரிவது சிறப்பு... சிறிய மனப்போராட்டம் இருந்தாலும் காலப்போக்கில் சரியாகும்... இப்படி ஒரு நண்பனிடம்(?) இருந்து கடந்த வாரம் பிரியும் சூழ்நிலை... மனசுக்கு கடினமாக இருந்தாலும் ஒரு சுமை குறையும் என்ற நம்பிக்கை இருந்தது...

மனசுக்குள் உள்ள வலி, வேலையையும் உடலையும் பாதிக்கிறது... ஒரு பெரியனாட்டமில்லாமல் ஒரு வாரமாக அலுவலகப் பணி சென்றுக்கொண்டுருக்கையில் சரி உடல் பிரச்சனையாவது சரி பண்ண மருத்துவரை அணுகி நலமடைய வழி செய்வோம் என்ற கருத்து மனதில் வருகிறது...

நேற்று மருத்துவரை அணுகுகையில், நடந்த உரையாடல் கீழே...

"அய்யா ஒரே தலைவலியாக இருக்கிறது, உடல் வலிக்கிறது, எப்போதும் tired ஆகவும் காய்ச்சல் வரும் என்பது போன்ற உணர்வும் இருக்கிறது"

மருத்துவர்: உங்க வயது என்ன தம்பி?

"28"

மருத்துவர்: அப்படின்னா சர்க்கரை நோய் வர வாய்ப்பில்லை... உங்க எடை எவ்வளவு...

"74"

மருத்துவர்: பிரச்சனை இங்கதான் இருக்கு... தம்பி நல்லா உடற்பயற்சி செய்யுங்க... இப்பவே எடைய குறைக்கிலைனா பின்னாடி சக்கரை நோய், BP, Heart Attack எல்லாம் வரும்... எப்படியாச்சும் எடைய அறுபத்தஞ்சா ஆக்கிருங்க... எல்லா பிரச்சனையும் பறந்து போயிரும்... நீங்க தன்னாலே உற்சாகமா ஆயிருவீங்க...

"உடற்பயற்சி தினமும் செய்யிறேன் (சும்மா அடுச்சு விட வேண்டியதுதான, வந்து பாக்கவா போறாரு :)). எவ்வளவுதான் செய்தாலும் எடை குறைய மாட்டேங்குது... இல்லையா, உடம்பு சரியில்லாத மாதிரியே தோணுது, ஏதாவது மருந்து குடுங்க"

மருத்துவர்: அப்படி இல்லப்பா, நீ உடற்பயிற்சி செய்தால் மட்டும் போதாது... சாப்பாட்ட குறைக்கணும்... தம்பி, உங்கள பாத்தாலே காலையிலே 10 இட்லி, 8 பூரி சாப்பிடுபவர் மாதிரி தெரியுது (இவருக்கு எப்படி தெரிஞ்சுது? சரியா சொல்றாரு)... காலையில 3 இட்லியா சாப்பாட்ட குறைச்சிருங்க... எல்லாம் சரியாயிடும்...

"இல்ல இல்ல நான் கம்மியாதான் சாப்பிடுறேன்... எப்போதும் diet தான்(கீழ விழுந்தாலும் மீசையில மண் ஓட்டக்கூடாதே :))"

மருத்துவர்: தம்பி, எல்லோருக்கும் இந்த தலைமுறை இளைங்கருக்கு இப்போ இந்தமாதிரி பிரச்சனை நிறைய இருக்கு... வயசுக்கு அதிகமான மனசுமையே இதுக்கு காரணம்... இதுக்கு மருந்தெல்லாம் கிடையாது... ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்காதிங்க... மன நிம்மதியான, உடல் நலத்தோடு ஆரோக்கியமான, மகிழ்ச்சியான நிலையில் எப்போதும் இருக்க ஒரே வழிதான்... பற்றட்ட வாழ்க்கை வாழனும்ப்பா.... (மருத்துவர் கிட்ட இருந்த இத யாரும் எதிர்பாத்திருக்க மாட்டங்க) (இப்போ முதல் பத்தி படிங்க).

"????*&*)(^%^!!!"