புதன், மார்ச் 23, 2011

தேர்தலில் வாக்களிப்பீர்களா அன்பர்களே!

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ‘ஒரு’ உருப்படியான திட்டம் கூட இல்லை என்பது பகுத்தறிவுள்ள எவனுக்கும் தெரியும்.

சமீபத்தில் ஒருவரை சந்தித்தேன். நன்கு படித்தவர். நல்ல தொழிலில் இருக்கிறார்.   அவருடன் (அவர் தி.மு.க அனுதாபி) பேசுகையில், அவரும் நல்ல திட்டம் எதுவும் இல்லை என ஒப்புக்கொண்டார், இருப்பினும் நாட்டுக்கு நல்லதோ கெட்டதோ, தலைவர் மிகவும் அறிவாற்றலோடு ஏழை மக்களுக்கு(ஓட்டு போடுபவர்கள் அவர்கள்தானே) நல்ல திட்டங்கள் போட்டுள்ளார், பல இலவசங்களை தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளார் என்று வெகுவாக பாராட்டிக் கூறினார்.

மேலும் அவர், இன்று மக்கள் தெளிவாக உள்ளார்கள், ஒன்று ஓட்டு போடும் முன் ஓட்டுக்கு பணம் பெறுவது, இரண்டாவது வெற்றி பெற்றபின் இலவசங்கள் பெறுவது.... இதை கடந்த முறை வெற்றிகரமாக்கிய தலைவர் சிறப்பாக தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளார், எனவே வெற்றி தி.மு.க.விற்கு உறுதி என்று கூறுகிறார்...

பகுத்தறிவுள்ளவர்கள், படித்தவர்கள், “நாம் செலுத்தும் வரிப்பணத்தினால் ஆட்சியை இப்படி சீரழிக்கிறார்களே, மக்களை ஏமாற்றுகிறார்களே” என தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் இப்படி பேசலாமா...

தேர்தல் அறிக்கையை சிறிது அலசினால்...

• இன்று தமிழ்நாட்டில் குறைந்தது இரண்டு மணிநேரம் முதல் மூன்று மணிநேரம் மின்சாராம் தடை - இதை நிவர்த்தி செய்ய ஒரு தொலைநோக்கு திட்டமும் இல்லை. இந்த நிலை நீடித்தால் சிறுது நாளில் இரண்டு அல்லது மூன்று மணிநேரமே மின்சாரம் வழங்கும் நிலைதான் வரும்.

• வேலை வாய்ப்பைப் பெருக்கி நாட்டில் வேலையில்லா பிரச்சனை தீர உருப்படியான ஒரு திட்டமும் இல்லை இந்த அறிக்கையில்...

• ஆட்டுக்கும் மாட்டுக்கும் பயன்படும், வெளிமாநிலத்திற்கு கடத்தப்படும், ஒரு ரூபாய் அரிசி 35கிலோ இலவச அரிசியாக மாறவேண்டுமா?

• நஷ்டத்தில் இருக்கும் போக்குவரத்து, புதிய சொகுசு பேருந்துகளால் குறைந்தது 5,7,10 ரூபாய் பயணச்சீட்டு என மாறி பொதுமக்களை கவலையடைய வைத்த போக்குவரத்து மேலும் வலுவிழக்க இலவச பஸ் பாஸ் தேவையா? நல்ல திட்டம் தான் முதலில் வலுவிழந்த துறையைச் சீர்படுத்த திட்டம் வேண்டுமல்லவா... வருமானத்தைக் கூட்ட பேருந்துக் கட்டணத்தை கூட்ட வேண்டும், ஏற்கனவே மலையெனயுள்ள விலைவாசி மேலும் இமையமாக இதுவே காரணமாகும்.

• ஊழல் இல்லாமல் ஆட்சியில்லை என இந்திய அரசியலையே புரட்டி போட்ட ஒரு தலைவர்(?) இலவசம் இல்லாமல் இன்று ஆட்சியில்லை என்றும் ஒரு புரட்சியை (ஆம் புரட்சிதான் பின்னாளில் ஒரு மக்கள் புரட்சி வெடிக்க இந்த இலவசம் காரணமாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை) உருவாக்கிவிட்டார். விளைவு மீண்டும் இலவசங்கள் கிரைண்டர் அல்லது மிக்ஸி என்று... ஏழைகள் இருக்கும் வரை இலவசம் (ஏழைகள் ஏழையாக மாற்றும் இந்த இலவசம் என்பதை நாம் அறிவோம்) என்று சொல்லி, ஏழைகளை வீட்டில் இலவச டி.வி. பார்த்து ஒரு ரூபாய் அரிசியை இலவச கிரைண்டர் மிக்ஸி மூலம் சமையல் செய்து சாப்பிட அரசே பழக்கினால் மக்களிடம் வேலை செய்யும் பழக்கமே மங்கிவிடுமோ என தோன்றுகிறது... என்னாகுமோ அவர்களின் எதிர்கால நிலை.... (எவ்வளவு கூலி கொடுத்தாலும், வேலை செய்ய ஆளில்லை பல ஊர்களில்...) அப்படியே அவன் வேலை செய்தாலும் அவன் கூலியில் முக்கால் பங்கு போய்விடும் பண்டிகை மற்றுமல்லாது வருடம் முழுக்க டார்கெட் போடும் டாஸ்மாக்கிற்கு... உண்மையிலேயே அவன் கதி ஆரோகதிதான்... எவன் வீட்டு காசில் இலவசம்... பிச்சை போடுவதுபோல் இலவசமும் ஓட்டுக்கு காசும் கொடுத்து ஒரு குடும்பத்திற்கு ஒரு சிலபேர்க்கு பல ஆயிரம் (லட்சம்) கோடிகள் போய்ச் சேர வேண்டுமா...? விலைவாசி உயர்வை குறைக்க எந்த திட்டமும் இல்லாத அறிக்கையில், மின்சாரம் தடையின்றி வழங்க எந்த திட்டமும் இல்லாத அறிக்கையில் இலவசங்கள் என்று சொல்லி இனியும் ஏழைகளை ஏமாற்ற வேண்டுமா...?

• அரசுக் கல்லூரிகளில் ஆதி திராவிட மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவார்களாம், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மூன்று இலவச சீருடைகள் – ஆனால் அரசுப்பள்ளி கல்லூரி நிலைமை அனைவரும் அறிவோம், தரமான கல்வி இல்லை இதற்கு அர்த்தம் தரமான ஆசிரியர்கள் அல்லது போதுமான ஆசிரியர்கள் இல்லை... இதனைப் போக்க திட்டம் கொடுக்காமல் இலவசம் சீருடை அணிந்து, கணினி வைத்து அவர்கள் என்ன செய்வது... இரண்டாவது தனியார் பள்ளி கல்லூரி கட்டணங்களை இன்றுவரை நெறிப்படுத்தவில்லை... நெறிப்படுத்த முடியாது ஏனென்றால் இன்று அனைத்து பள்ளி கல்லூரி நுறுவனங்களும் தி.மு.க. தலைவர்களின் பினாமியுடையது அல்லவா...

• இன்றுவரை தீராத தமிழ்நாட்டு பிரச்சனைகள் காவிரி, பாலாறு, பெரியாறு நதிநீர் பிரச்சனைகள்... இதற்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு சிறு முயற்ச்சியும் எடுக்காத அரசு, இன்று தேர்தல் அறிக்கையில் நதிகளை தேசியமயமாக்க மத்திய அரசை கோருவார்களாம்... (தலைவா எப்படி மடல்கள் எழுதியா? :-))

• இலங்கை அரசின் மீனவர்கள் படுகொலைகளுக்கு சிறிதும் மெனக்கெடாது கடிதங்கள் எழுதியவர் இன்று தேர்தல் என்றதும் மீனவர்கள் ஓட்டுக்குளைப் பெற டீசல் மானியம், காப்பீடு, மீனவர்கள் படுகொலைகளைத் தடுக்க மத்தியரசைக் கோருதல் என அடுக்கடுக்காக ஏமாற்று வாக்குறிதிகளை அள்ளிவிட்டுள்ளார்... உயிர்களை இழந்த மக்கள், மீனவ நண்பர்கள் இவரின் கபட நாடகத்தை அறியாமலில்லை...

• ஏற்கனவே அனைத்து அமைச்சர்களும் ரியல் எஸ்டேட் தொழிலில் கொடிகெட்டி பறந்து கொண்டிருக்கும் வேளையில், ஒரு வீடு கட்ட அவனவன் படும் பாடு, செங்கல் விலை ஒன்பது பத்து, மணல் விலை கின்னஸ் புத்தகத்திற்கு போய் விடும் போலும் ஒரு லாரி மண் இருபது ஆயிரத்தை தொட்டு விட்டது... இவர்கள் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்கு எழுபத்தைதை ஒரு லட்சம் ரூபாய் ஆக்குகிறார்களாம்.... ஐயகோ... ஒரு லட்சம் பேர் பயனடைய (மீதி காசை அவன் எப்படி ரெடி செய்வானோ), ஆறு கோடி பேர் கஸ்டப்படுனுமா? இது ஒரு திட்டமா? (ஏழை: நீ விலையைக் குறைக்க வழி செய், வேலை செய்து வருமானத்தை பெருக்க வழி செய்... நான் வீடு கட்டிக் கொள்கிறேன்....)

• நீர்வளத்தை பெருக்கி விவசாயம் சிறக்கத் திட்டம் ஏதும் இல்லை... விவாசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறிவருகின்றன... கடன் தள்ளுபடி செய்ததால் பெரு விவசாயிகளே பயனடைந்தார்கள், குறுவிவசாயிகள் நஷ்டமடைந்தால் தொடர்ந்து எப்படி பருவம் செய்வார்கள்? பலர் விவசாயத்தைக் கைவிட்டு விட்டார்கள் என்பதே நிதர்சனம்... மழை வந்தால் ஊரெல்லாம் வெள்ளக்காடு, நீர் வீணாக கடலில் கலக்கும்... ஆனால் கோடை காலத்தில் நீரின்றி வறண்டு கிடக்கும் குளங்கள் ஏரிகள்... பாசனத்திற்கு நீரை மழைக்காலத்தில் சேர்த்து வைத்து, நவீன தொழில்நுட்பத்திற்கு அரசு வழிவகுத்து, தடையில்லா மின்சாரம்(இப்போது வெறும் மூன்று அல்லது நான்கு மணி நேரமே மின்சாரம் வருகிறது, அதுவும் எப்போது எனத் தெரியாது... அவர்கள் மின்சாரத்தை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் நிலை) வழங்கினால் விவாசயம் தங்கு தடையில்லாமல் நடக்கும், விவசாயம் சிறக்கும்... காய்கறி, சமையல் பொருட்கள் விலை குறையும்... வேளான்துறையை கவனிக்காமல் விட்டால் நம் அனைவரின் எதிர்காலமும் கேள்விக்குறிதான்... ஆனால் வேளாண்மையைப் பெருக்க எந்த ஒரு திட்டமும் இல்லை இந்த தேர்தல் அறிக்கையில்...

• தேர்தல் அறிக்கையிலேயே மிகச்சிறந்த நகைச்சுவை என்ன வென்றால் “அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் லஞ்சம் வாங்குவதை தடுக்க, புகார்கள் விரைவாக விசாரித்து தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உலக சாதனை மெகா 2G ஸ்பெக்டரம் ஊழல் புரிந்த அரசு ஒரு போலி வாக்குறுதி கொடுத்ததுதான்... இதையும் ஒரு ஏழை நம்பி விடுவனோ? நம்பினாலும் நம்புவான் ஒருவேளை அவனுக்கு தி.மு கழக ஆட்சியில் கண் காது வாய் வேலை செய்யாமல் போயிருந்தால்...



இவர்களின் ஐந்தாண்டுகால ஆட்சியில் திமுக தலைவர், தலைவர் குடும்பம், அமைச்சர்கள் குடும்பங்கள் மட்டுமே வாழ்ந்து கொழுத்து ஒரு விரல் மட்டுமே வீங்கி இருக்க (இது நோய் அல்லவா)



குடும்ப அராஜகம், 1.76 லட்சம் கோடிப்பணத்தை நாட்டிற்கு நஸ்டப்படுத்திய 2G ஸ்பெக்டரம் ஊழல், புதிதாக முளைத்த திரைப்பட நிறுவனங்கள் (க்ளவுட் நைன், சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயண்ட், மு.க.தமிழரசுவின் மோகனா மூவீஸ்), ஏற்கனவே இருக்கும் 25 தொலைக்காட்சி அலைவரிசைகள் போதாது என்று குடும்பச்சண்டையால்(மூன்று உயிர்கள் மதுரை தினகரன் அலுவலகத்தில் போனது தமிழ்நாட்டிற்குத்தான் நஷ்டம், அவர்கள் குடும்பத்திற்கு லாபமே) புதிதாக ஐந்திற்குமேல் தொலைக்காட்சி அலைவரிசைகள் என குடும்ப வருமானத்தை பெருக்கும் சாதனைகளே பெரிதாக இருக்க



பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் கழகத்தின் அங்கமாக இமாலய கட்டணம் வசூலித்துக் கொண்டிருக்க



இலவசம் என்ற மாயையில் தமிழகத்தையே சோம்பேறி மாநிலமாக உருவாக்கி, இதை ஏதோ உன்னத திட்டம் போல இந்திய தேசத்தின் மற்ற மாநிலங்களையும் இதன்பால் ஈர்ப்பு ஏற்படுத்தி நாட்டையே மாசுப்படுத்திகொண்டிருக்க



தமிழ் இனத்தையே இலங்கையில் அழிக்கும் போதும் தமிழக மீனவர்களை இலங்கை அரசு படுகொலை செய்தபோதும் கண்டும் காணாது இருந்து (உண்மையில் இங்கே அது பெரிய விஷயமாக ஆகக்கூடாது என பார்த்துக்கொண்டார்), இருப்பினும் முதல்முறை குடும்ப உறுப்பினர்களின் மத்திய அரசு அமைச்சர் பதவிகளுக்கும், பின்னர் ஒருமுறை 2G ஸ்பெக்டரம் ஊழல் வழக்கில் தன் மகளை, மனைவியைக் கைது செய்யாமல் காப்பாற்ற என தன் குடும்ப முன்னேற்றத்திர்காகவே மத்திய அரசை விட்டு விலகுவதுபோல் நாடகமாடினார் என தேசிய செய்தி ஊடகங்களே சொல்லுமளவுக்கு ஆட்சிபுரிந்து கொண்டிருக்க



இதை அனைத்திற்கும் மேலாய் தமிழகத்தையே பகுதி நேரம் இருட்டில் வாழவைத்து கொண்டு, மாதம் முதல் நாளானால் பத்திரிகையில் எப்போது மின்சாரம் கட் என தாய்மார்களை பார்க்க வைக்கும் அளவுக்கு மின்சாரப் பிரச்சனை வாட்டி கொண்டிருக்க



மேலும் ஐந்தாண்டுக்கு எந்த ஒரு தொலைநோக்கு திட்டமும், தடையில்லா மின்சாரம் வழங்கும் திட்டமும், வேலைவாய்ப்புத் திட்டமும், விவசாயம் சிறக்க திட்டமும் இல்லாமல் இருக்கும் இந்த தேர்தல் அறிக்கையைக் காட்டி, இலவசத்தைக் கொடுத்து, ஓட்டுக்கு பணமென ஏழைகளை மக்களை ஏமாற்றி இந்த தி.மு.க அரசு வர வேண்டுமா???



இத்தகைய தி.மு.க. அரசு வர வேண்டாம் என விரும்பினால், ஏழைகளை குறிவைத்து ஆட்சியைப் பிடிக்க எண்ணும் இவர்களின் நய வஞ்சகத்திற்கு எதிராக நீங்கள் குரல் கொடுக்க வேண்டும் என விரும்பினால், உடனே செய்ய வேண்டியது இவர்களின் மோசடி வேலையை ஏமாற்று பிரச்சாரத்தை ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு கொண்டு சேர்ப்பது மட்டுமல்ல... நாம் அனைவரும் ஏப்ரல் பதிமூன்று அன்று நம் ஊருக்குச் சென்று தேர்தலில் நம் வாக்குகளை அளிப்பதே... நண்பர்கள் கூறினார்கள் இங்கே பேசுபவர்கள் எத்தனை பேர் ஓட்டு போடச்செல்வார்கள் என்று... சரியாக புதன் அன்று தேர்தல் வைத்திருப்பதால் (படித்தவர்கள் மாற்றி ஓட்டு போடக்கூடும் என இது கூட ஒரு சூழ்ச்சியாக இருக்குமோ? ஒரு வார இறுதி நாளிலோ இல்லை வெள்ளி அல்லது திங்கள் கிழமையில் வைத்திருக்க கூடாதா? :-( ) பெங்களூரு போன்று வெளிமாநிலங்களில் அதிகமாக வேலைப்பார்க்கும் நம் நண்பர்கள் அனைவரும் கண்டிப்பாக ஊருக்கு வந்து நம் மக்களின் எதிர்காலம் மாண்புற தங்கள் வாக்குளை அளிக்க முயற்சி எடுக்க வேண்டும் என்பதே நம் அவா!

திங்கள், ஜனவரி 03, 2011

இலவசம் என்ற மாயை!


 
அரசு பல இலவச திட்டங்களை சில வருடங்களாக அறிவித்து நிறைவேற்றி வருகிறது. இதன் நன்மை தீமைகளை ஆராய இக்கட்டுரையில் முனைகிறேன்.

இலவச திட்டங்கள்:-

இலவச வண்ணத் தொலைக்காட்சி, மானியத்தில் 1 ரூபாய் அரிசி, இலவச வீடு வழங்கும் திட்டம், இலவச மருத்துவ காப்பீடு திட்டம், இலவச எரிவாயு அடுப்பு, பள்ளி மாணாக்கருக்கு இலவச மிதிவண்டி, விவசாயத்திற்கு இலவச மின்சாரம், விவசாயக்கடன் தள்ளுபடி, கிராமங்களில் அரசின் ‘100ரூபாய் வருமானத்தில் வருடத்தில் 100நாள் வேலை’ திட்டம்.

நன்மைகள்:-

பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு இத்திட்டங்களால் பயன்கள் மிக அதிகம். சாப்பாடிற்கே வழியில்லாதவர்களுக்கு 1ரூபாய் அரிசியால் சாப்பாடு கிடைகிறது. போதிய பணம் இல்லாமல் விறகு அடுப்பு பயன்படுத்துவோருக்கு எரிவாயு அடுப்பு. தொலைகாட்சி பெட்டியால் அன்றாட செய்திகளை கீழ்த்தட்டு மக்களும் அறியலாம். உறைவிடம் இல்லாதவர்களுக்கு வீடு கிடைக்கிறது. மருத்துவ காப்பீட்டு திட்டத்தால் மருத்துவ செலவு செய்ய இயலா மக்களுக்கு உயிர் எடுக்கும் நோய்களிலிருந்தும் மறுவாழ்வு கிடைக்கிறது. தொலைவில் உள்ள பள்ளி செல்ல மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி. இலவச மின்சாரத்தால் விவசாயத்தை மையாமாக கொண்ட நாட்டில் விவசாயம் தங்கு தடையில்லாமல் நடக்கிறது. தண்ணீரின்றி விவசாயம் தடைபட்டு கடனில் அவதியுற்ற விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி. இவற்றிக்கேல்லாம் மேலாக கிராமங்களில் மக்கள் வேலையின்றி வாடக்கூடாதென வருடத்தில் 100 நாள்கள் நாளுக்கு 100ரூபாயில் வேலை.

வேலை கிடைக்கிறது. வீடு கிடைகிறது. எரிவாயு அடுப்பு கிடைகிறது. அரிசி மலிவு விலையில் கிடைகிறது. விவசாயத்திற்கு மின்சாரம் இலவசமாக கிடைகிறது. கடன் பட்டால் கடன் தள்ளுபடி ஆகிறது. வேறு என்ன இலவசங்களால் பிரச்சனை, தீமை?

தீமைகள்:-

இவை அனைத்தும் பொருளாதாரத்தின் நடுத்தர மக்களால் கட்டப்படும் வரியால் நிகழ்கிறது. இத்திட்டங்களால் உண்மையிலேயே கீழ்த்தட்டு மக்கள் பயனடைந்து முன்னேற்றம் அடைந்தால் சமுதாயம் முன்னேறும், நாடும் முன்னேறும். ஆனால் நடப்பது என்ன?

100ரூபாய் வேலையால் வேறு வேலைக்கு ஆள் கிடைப்பது இல்லை. கட்டிட வேலைக்கும், விவசாய வேலைக்கும் ஆள் இல்லை. வருபவர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டும். அட, அந்த 100ரூபாய் நமக்கு ஏதும் நன்மை நடக்கிறதா என்றால் இல்லை. குளங்களை வெட்ட சென்று அங்கேயே தூங்குகிறார்கள். சம்பளத்தில் சிறுது பிடித்து பணம் பார்த்து மாட்டிகொண்ட ஊர்த்தலைவர்களின் செய்தியை நாம் அறிவோம். 1ரூபாய் அரிசியை பல இடங்களில் சாப்பிட முடியாத அளவுக்கு மட்டமான அரிசி, அப்படியே நல்லா இருந்தால் கடத்தல், கடையில் வாங்கினால் நடுத்தர மக்களும் வாங்க முடியாத அளவுக்கு விலை. சரி, 1ரூபாய் அரிசியே வாங்கி சாப்பிடலாம் என்றால் காய்கறி, சாமான்கள் விலை பல மடங்கு ஏறிவிட்டது. இதனால் கீழ்த்தட்டு மக்களைப்போல் நடுத்தர மக்களும் வெகுவாக பாதிக்க படுகின்றனர்.

அடுத்ததாக இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டம். இதனால் என்னவாயிற்று என்பது எல்லோருக்கும் தெரியும், அரசே முக்கிய மருத்துவமனைகளுக்கு விளம்பரம் தேடிக்குடுத்தாற்போல் ஆயிற்று. இதற்க்கு பதிலாக அரசு செலவு செய்கிற 400கோடி வருட சந்தாவை நம் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த செலவு செய்தால் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சயை அரசே கொடுக்கலாம். இதுதான் உண்மையான வளர்ச்சியாக இருக்க முடியும். நடுத்தர மக்கள் கொடுக்கும் வரியின் பயனாக இருக்கும்.

அடுத்ததாக தூரமாக பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி. நல்ல திட்டம் தான். பள்ளி அருகாமையில் எல்லா ஊரிலும் சிற்றூர்களிலும் இருக்க வேண்டும். இப்போது எந்நாளும் மக்களின் பிரிச்சனை, தனியார் பள்ளிகளின் கட்டணம் மிக உயர்வு. இது நம்மை சில வினாக்களை எழுப்பச் செய்கிறது. அரசு மற்றும் அரசு உதவி பெரும் கல்வி நிலையங்களின் தரம் எப்படி உள்ளது? ஏன் இப்பள்ளிகளின் கல்வி அல்லது கற்றல் முறை தனியார் கல்வி நிலையங்களின் தரத்தை போல் இல்லை? அரசு ஆசிரியர்கள் சம்பளம் வின்னைதொடும் அளவு உள்ளது, ஆனால் அவர்களை விட்டு விட்டு கட்டணம் வின்னைதொடும் அளவுள்ள தனியார் பள்ளிகளை மக்கள் ஏன் நாட வேண்டும்? அரசு தரும் இத்தனை சலுகைகளையும் தாண்டி இன்றும் பள்ளி செல்லக்கூடிய கீழ்த்தட்டு மக்களின் குழந்தைகள் வேலைக்கு போக வேண்டிய நிலை உள்ளது அல்லது கற்காமல் இருக்கும் குழந்தைகள் இன்றும் நாம் காண முடிகிறது, ஏன் இந்த நிலை? இந்த வினாக்களுக்கு பதில் அளிப்பதாக அல்லவா நம் அரசின் செயல்திட்டங்கள் இருக்க வேண்டும். அரசின் உதவி பெரும் பள்ளிகளின் தரம், கற்றலின் தரம் உயர்ந்தால் தானே கல்வியின் பயன்பாடு எல்லா தரப்பு மக்களுக்கு சென்றடையும்.

விவசாயத்திற்கு இலவச மின்சாரம், விவசாயிகளின் கடன் தள்ளுபடி பற்றி பார்ப்போம். உண்மை என்ன? மக்கள் பொது பயன்பாட்டிற்கு போதிய மின்சாரம் இல்லை, தினம் 2 மணிநேரம் மின்தடை. விவசாயத்திற்கோ 10 மணிநேரத்திற்கு மேல் மின்தடை. மின்சாரம் இருந்தாலும் தண்ணீர் பாசனம் சரியாக இல்லை. ஒருபுறம மழை வந்தால் வெள்ளக்காடு, சேமிக்க சரியான முறை இன்றும் இல்லை என்பது வேதனை. இதனால் விவசாயமே அழியும் நிலை உள்ளது. ஏற்கனவே விவசாய வேலையின் கூலி அதிகமாகி விட்டது. குறு விவசாயிகள் பெரும் பாதிப்பில் உள்ளனர். இவர்கள் கடன் தள்ளுபடி செய்தாலும் திரும்ப விவசாயம் செய்வது எப்படி. இதனால் பெரும் பயனடைந்தது அரசியல் சார்ந்த பெரும் விவசாயிகளே. விவசாயத்தின் அழிவு நிலையில் இருக்கிறோம். அரசு உடனே மிக விரைவாக தண்ணீர் பாசனத்திற்கு வழிசெய்ய வேண்டும். தொழில்நுட்பத்தை குறுவிவசாயிகளுக்கும் கொண்ட செல்ல வேண்டும். இதை செய்யாவிடல் விவசாய நாட்டில் விவசாயம் அழிவுநிலை வரும். இதை விட்டுவிட்டு மேற்போக்காக, அரசியல் இலாபத்திற்காக, தற்காலிக தீர்வாக இலவச மின்சாரம், மோட்டார், கடன் தள்ளுபடி என்றால் பின்னால் வரும் சந்ததிகளின் இழிநிலையை நாமே காண வேண்டியதாகிவிடும். நன்றாக விவசாயம் நடுக்கும், வருமானம் ஈட்டும் பட்சத்தில் ஏன் அரசு கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். அவர்களே உரிய நேரத்தில் கட்டிவிடுவார்களே. நாடும் முன்னேற்ற பாதையில் செல்லுமே.

இலவச தொலைக்காட்சி பெட்டியைப்பற்றி பேசவே வாய் வரவில்லை. ஏற்கனவே ஒரு ஏழை விவசாயி அரசிற்கே திருப்பிக் கொடுத்து பாமர மக்களின் மனநிலையை அரசுக்கு கூறி முன்னுதாரணம் ஆகி விட்டார். இந்த இலவச எந்த பயனும் மக்களுக்கு ஏற்பட போவதில்லை. 1ரூபாய் அரசி சாப்பிட்டு, ஒழுங்கான வேலை செய்யாமல், சொம்பேரித்தானமாக பெரும் தொடர்களும், அரசில் இருப்போரின் குடும்ப தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், திரித்த செய்திகளையும் பார்க்கும் இழிநிலை இனிமேல் எந்த சமுதாயத்திற்கும் வரக்கூடாது. இதனால் அக்குடும்பத்தின் நிரந்தர வருமானம் உறுதிப்படுத்தப்பட்டது.

இலவச வீடுகள் கட்டும் திட்டம் சொன்ன உடனே வீடுகட்டும் பொருட்கள் விலை அனைத்தும் ஏறிவிட்டது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. இதனால் வரிகட்டியே தன் பெரும்பங்கு வருமானத்தை இழக்கும் நடுத்தர மக்களின் நிலைதான் அரோகதி.

முடிவுரை:-

இக்கட்டுரையின் முடிவுரை வந்தாயிற்று, ஆனால் இந்த இலவசம் என்ற மாய நிலைக்கு முடிவு காலம்தான் வருவது என்றோ...?

மக்களுக்கு தேவை நல்ல விவசாயம் பண்ணக்கூடிய நிலை, நல்ல உட்கட்டமைப்பு (சாலை, தொடர்பு), நல்ல வேலை, நல்ல ஆரோக்கியமான நிலை, நல்ல கல்வி, நல்ல அடிப்படை வசதிகள். இவையெல்லாம் அரசு சாரமலேயே படிப்படியாக அதுவாகவே வளர்கிறது. அதை இலவசங்கள் கெடுத்துவிட கூடாது. நாட்டின் வளர்ச்சி தடைப்படக்கூடாது. நாட்டின் முன்னேற்றம் வெறும் தோற்றமாயிறாமல் சீரான வளர்ச்சியாக இருக்க வேண்டும்.

வருங்காலத்தில் நல்ல சமுதாயம் உருவாக, நாடு நல்ல நாடாக வளர அரசு உதவ வேண்டும். அறத்தை மக்களுக்கு ஊக்குவிக்க வேண்டும். ‘கடைசி ஒரு ஏழை இருக்கும் வரை இலவசம் தொடரும்’ என்று அரசு சொல்வது மக்களை ஏழையாகவே வைப்பதற்கான முயற்சியேயன்றி உண்மையான வளர்ச்சிப்பணி அல்ல. ‘நாட்டின் நிலை அறிந்து வளர்ச்சிப்பணிகள் செய்யும் அரசே மக்கள் மதிப்பை பெரும், இல்லை மக்கள் மதிப்பை இழக்கும்’ என்ற அய்யன் கூற்றை அரசு எண்ணி இலவச மாயையால் நிகழப்போகும் எதிர்வினைக்கு முற்றுப்புள்ளி வைப்பது சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் நலமாகும். மக்களும் அறியாமையில் மூழ்கி இலவச மாயையில் சிக்காமல் வெளிவர வேண்டும்.

குறள் 554

கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு

விளக்கம்

நாட்டுநிலை ஆராயாமல் முறையில்லாமல் ஆட்சி புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும்.