இந்தியா என்ற தேசம் வெள்ளைக்காரனிடம் சுதந்திரம் பெற்று பின் சுமார் இரண்டரை ஆண்டுகள் கழித்து நம் தேச சுதந்திர போராட்ட முன்னோடி தலைவர்களால் ஜனநாய அமைப்பு உருவாக்கப்பட்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு குடியாட்சி அமுல்படுத்தப்பட்ட நாள் ஜனவரி 26. நல்ல செய்திதான், கேட்கிறதுக்கு நல்லாத்தான் இருக்கு :).
ஆனால் ஒரு தேசிய உணர்ச்சியே இல்லையே... சும்மா ஜெய் ஹிந்த், பாரத மாதாக்கு ஜே, ஐ லவ் மை இந்தியா என்று எல்லாருக்கும் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டால் தேசிய உணர்ச்சியாகி விடாது நண்பர்களே.. எத்தனை பேருக்கு காஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் அவர்கள் பிரச்சினை என்ன, ஏன் தினந்தினம் இராணுவத்தாலும் மாவோயிசம் போன்ற தீவிரவாதங்களாலும் அவதிப்படுகிறார்கள் என்று தெரியும்... இங்கே தமிழகத்தில் மீனவர்கள் தாக்கப்பட்டதற்கு எத்தனை பேருக்கு கவலை இருந்திருக்கும்... இப்படி எத்தனையோ பிரச்சனைகளை கண்டும் காணததுபோல் இருந்துகொண்டு குடியரசு தினத்தில் மட்டும் வருவது எப்படி தேசிய உணர்வாக இருக்க முடியும்... தேசத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு பிரச்சினை என்றால் ஒரு கவலை, அக்கறை மற்ற குடிமகனுக்கு இருக்க வேண்டுமே, அதுதானே தேசிய உணர்வு... அது ஏன் இல்லை...??
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் அடிப்படையில் மக்களே மக்களை ஆளும் மக்களாட்சிதானே குடியரசு... மக்களுக்கு ஒன்றென்றால் இந்த குடியரசு உடனே தீர்த்து வைக்க வேண்டுமல்லவா... அதுதானே உண்மையான ஜனநாயகமாக இருக்க முடியும்... அரசியல்வாதி என்பவன் யார் மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி தானே... ஏன் அவனுக்கு தீர்த்து வைக்க எண்ணம் வரவில்லை..? சுயநல அரசியல்வாதிகள் நிரம்பிய ஒரு அரசால் எப்படி இது சாத்தியம் ஆகும்? அவர்களுக்கு தேசிய உணர்வும் தேச இறையாண்மை குறித்த (இது என் நாடு, நான் என் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டுருக்கிறேன், அவர்களுக்கு துரோகம் செய்யமாட்டேன், அவர்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்க மாட்டேன், அவர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதே என் தலையாகிய கடமை என்ற) விழிப்புணர்வும் இருந்திருந்தால் இப்படி இருப்பார்களா... ஏன் அந்த தேசிய உணர்வும் தேச இறையாண்மையை பேண வேண்டும் என்ற உணர்வும் இல்லை?
இதற்கு மக்களை காரணம் சொல்லவே மாட்டேன்.... ஏனென்றால் நம்மை இணைப்பதற்கு எந்த காரணிகளும் கனமானதாக திடமானதாக உறுதியானதாக இல்லை என்பதுதான் உண்மையான காரணம்... இதை திட்டமிட்டே தான் செய்துள்ளார்கள்.... வெள்ளைக்காரனிடமிருந்து அரசை (பிச்சைகேட்டு) வாங்கியவர்கள், சமூகத்தில் எந்த சீர்திருத்தமும் ஏற்படுத்தும் முன்னே அரசியலை இராவோடு இரவாக அபகரித்துள்ளார்கள் என்பதுதான் உண்மை...
ஏன் அரசியல் தீர்வுக்கு முன் சமூக சீர்திருத்தம் வேன்றுமென்று அம்பேத்கார் போராடினார் என்று சிந்தித்தால் நமக்கு எளிதாய் விளங்கும்... நாம் நம்மை ஒரு தெருவிற்குள்ளேயே முடக்கி வைத்திருக்கிறோம்... காரணம் நம் 'சாதி'ய அமைப்பு... தேசப்பிதா மகாத்மா மற்றும் அன்றைய தலைவர்கள் நம்பியது சாதியத்திற்கு ஊற்றுக்கண்ணான வேதகால வர்ணாஸ்ரம அமைப்பு... பிராமணன் (வேதம் ஓதுதல், கல்வியறிவு), சத்ரியன் (காவல் காப்பது), வைஸ்ரியன் (விவசாயம், வாணிபம்), சூத்திரன் (தொண்டூழியம்), இடைக்காலத்தில் அவரது வர்ணங்களின் கடமையிலிருந்து மக்கள் தவறிவிட்டார்களாம்... மீண்டும் அவரவர் கடமையை செய்யவைத்தால் சமூக அமைப்பு மீண்டும் மேம்ப்படுமாம்... இதுதான் அவர்களின் நம்பிக்கை... தீண்டத்தாகதவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக பல நூற்றாண்டுகளாக நடந்த வன்மத்திற்கு இதுதானே காரணம்... எப்படி அவரவர் குலத்தொழிலை விருப்பமில்லாவிட்டாலும் செய்ய முடியும்? நடைமுறையில் சாத்தியமா? தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக கல்வியறிவையும் பொருளாதாரத்தையும் பறித்து அதோடுவிடாமல் ஆயுதமும் சத்ரியனுக்கு மட்டும் தான் சொந்தம் என்று நிராயுதபாணியாக அவர்களை வலிமையற்றவர்களாக்கி மிகப்பெரிய கொடுமை நிகழ்ந்துள்ளது... சமூகத்தில் பெரும் அங்கமான இவர்களுக்கு நீதி கிடைக்காமல் எப்படி இது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் உள்ள ஜனநாயம் ஆகும், இந்தியா குடியரசு ஆகும்...
சாதி, பல உட்பிரிவுகள் என பிரிந்துள்ள இன்றைய சமூகத்திற்கு இது விளங்காது... இது விளங்கினாலும் நமக்கேன் கவலை என உள்ளது... மீண்டும் சொல்கிறேன் காரணம் அவர்கள் இல்லை... மதம், புனிதம், வேதம், சாஸ்திரம் என்ற பெயரால் அவர்கள் மேல் திணிக்கப்பட்டுள்ள சாதிய அமைப்பே காரணம்... அம்பேத்காரின் சிந்தனை அப்படியே சென்று விடக்கூடாது... நம் சமூகம் மேம்பட சாதியத்தை ஒழிக்காமல், சமூக சீர்திருத்தம் வராமல் ஜனநாயம் சாத்தியமில்லை... குடியரசு என்பது உண்மையான மக்களின் அரசாக இருக்கவும் வாய்ப்பில்லை...
மதம், இனம், மொழி என்று பலக்காரணிகள் நம்மை பிரித்தாலும் அதில் வெளியில் தெரிந்துவிடும் ஆனால் சாதியப்பற்று மனதில் நம் கண்ணோட்டத்தில் உள்ளது... நம் அண்டை வீ ட்டுடனே நம்மை எளிதில் பிரிக்கும் சக்தி அது... "நமக்கு ஒரு பிரச்சினை என்றால் நாம் இணைந்து செயல்பட்டு நம் பிரச்சினையைக் களைவோம்" என்று தேசிய உணர்வு எழாமல் தடுக்க முக்கிய காரணம் சாதியே...
சாதி மதம் தாண்டி மொழி இனம் அடிப்படையில் இணைவது நமக்கு வளர்ச்சியைத் தரும்... அதாவது எந்த எல்லைக்குள் "நமக்கு ஒரு பிரச்சினை என்றால் "நாம்"தான் இணைந்து செயல்பட்டு நம் பிரச்சினையைக் களைய வேண்டும்" என்று தேசிய உணர்வு எழுகிறதோ அதில்தான் மக்களுக்கான ஜனநாயத்தை அமுல்படுத்த முடியும்... அதனால்தான் தமிழுணர்வு, தமிழர் உணர்வும், தமிழ் சார்ந்த தேசிய உணர்வும் அவசியமாகிறது... அதுவே விஞ்ஞானப்பூர்வ வளர்ச்சியாகவும் இருக்கும்... அதற்குத்தான் முன்னோடியாக இவ்வளவு பிரிவினைகளை வைத்தும் மொழிவாரி மாநில சுயாட்சி(முழுமையாக சுயாட்சி இருக்கிறதா என்பது அடுத்த கேள்வி?) தத்துவத்தை அரசியலமைப்பு சட்டமாக்கி மக்களை இதுதான் ஓரளவிற்கு இணைக்கும் என்று அமைத்துள்ளார்கள்...
ஆகவே முழுமையான ஜனநாயகம் அமைய முதலில் எடுக்க வேண்டிய முயற்சி, ஆதிக்க சாதி வெறியும் சுய சாதி வெறியும் களைந்து தாழ்ந்தப்பட்ட சாதி மக்களுக்கு அரசிலும் கல்வியிலும் அவர்களுக்கான பிரிதிநிதித்துவத்தை (சிந்திக்க வேண்டும்... இங்கே அவர்களுக்கு நீங்கள் இட ஒதிக்கீடு கொடுக்கவில்லை... பல தலைமுறைகளாக தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்ததால் அவர்களுக்கான பிரிதிநித்துவத்தை இழந்திருக்கிறார்கள்... அதனை அவர்கள் பெற வேண்டும்... நாம் யாரும் இடம் விட்டுக் கொடுக்க வில்லை) கிடைக்கச் செய்ய வேண்டும்... இதில் வெற்றிபெற்றால்தான் நாம் ஜனநாயகம் நோக்கி பயணிக்க முடியும்... சமூக சீர்திருத்தம் இல்லாத அரசியல் சீர்திருத்தம் குளம் கட்டாது சிறிது காலம் இருக்கும் கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போன்றதாகும்...
அதனால் நண்பர்களே, இந்த குடியரசு தின விழாவில் உண்மையாகவே நல்ல குடியரசு அமைய வேண்டும் என்ற சிந்தனை உங்கள் மனதில் தோன்றினால்,
உங்கள் அடிமனதில் இருந்து இந்த சாதிய உணர்வை அள்ளி வெளியே போடுங்கள்... மதம் நம்மை சீராக்கவே, நம்மை அழித்து நம் சமூக உணர்வையும் அழிப்பதற்கில்லை... ஆகவே மதத்தை அற வாழ்வு வாழ மட்டும் பயன்படுத்தவும்(இப்போதுள்ள சூழ்நிலையில் மதம்தான் மனிதனை ஆள்கிறது... அந்த நிறுவனம் அல்லது அமைப்பு அதற்காக உருவாக்கப்படவில்லை, மனிதன் தான் மதத்தை தன் வளர்சிப்பயன்படுத்திக்கொள்ள வேண்டும், அதற்கு இடைஞ்சலாக சாஸ்திர மனுதர்ம வேதங்கள் தடையாக இருந்தால் அவைகளை பின்பற்றாமல் நம் சமூகத்திலிருந்தே தடை செய்யவும் அல்லது அவைகள் ஆதரிக்கும் மனிதத்திற்கு சமூகத்திற்கு எதிரான வேத அதிகாரங்களையாவது அகற்ற தயாராய் இருப்போம்), சாதியத்தை வேரோடு அழித்து சமூக தேசிய உணர்வு வளர்க்கவும் உறுதி எடுப்போம்...